யுகதனவிய ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கம் தீர்மானம் எடுக்கும்!

யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக அனைவரதும் கருத்துகளையும் ஆராய்ந்து  அரசாங்கம் தீர்மானம் ஒன்றுக்கு வரும். அது தொடர்பாக கருத்து தெரிவிக்க ஒப்பந்தத்தின் சட்டமூலம் கட்சி தலைவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கெரவலபிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தில் இருக்கும் பங்காளி கட்சிகள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருவது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கெரவலபிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்காக, அதுதொடர்பான ஒப்பந்தத்தின் சட்டமூலம் கட்சி தலைவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

ஜனநாயக அரசாங்கம் என்றவகையில், எவருக்கு வேண்டுமானாலும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் இருக்கின்றது. அந்தவகையில் அனைவரதும் கருத்துக்களை ஆராய்ந்து இது தொடர்பாக அரசாங்கம் சிறந்த தீர்மானம் ஒன்றுக்கு வருவருதற்கு நடவடிக்கை எடுத்துவருகி்ன்றது.

அத்துடன் யுகதனவிய ஒப்பந்தத்தின் சட்டமூலம் கட்சி தலைவர்களுக்கு கையளித்து, அதுதொடர்பாக ஆராய்ந்து கருத்து தெரிவிக்கும் கட்டமே தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் இருக்குமானால் அவை இடம்பெறவேண்டும்.  

அதேபோன்று இந்த ஒப்பந்தத்தின் சாதக பாதகங்கள் தொடர்பாகவும் குறித்த அமைச்சு ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

அதனால் யுகதனவிய ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளும் தற்போது அதன் சாதக பாதகங்கள் தொடர்பாகவே தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து எதிர்காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன் நாடு என்றவகையில் நாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் பிரச்சினை இருந்து வருகின்றது. இதில் ஏதோ தவறு இடம்பெற்றிருக்கவேண்டும் என்றே நினைக்கின்றோம். அதனால் இதுதொடர்பாக வரைவாக ஆராய்ந்து மக்களுக்கு தீர்வொன்றை வழங்கவேண்டும் என்றார்.