கிழக்கு மாகாண சுகாதார துறையினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

IMG 6908
IMG 6908

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகாண் மருத்துவ உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று  வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து காந்தி பூங்கா வரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டினையடுத்து கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகாண் மருத்துவ  உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் சுகாதார தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர்  சுகயீன விடுமுறையை அறிவித்துவிட்டு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னால் ஒன்றிணைந்தனர். 

இதனையடுத்து ஒன்றிணைந்த சுகாதார துறையினர் காலை 10 மணிக்கு அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பெற்றுத்தரப்படாமல் மறுக்கப்பட்ட எமது உரிமைகளை மீளப் பெற்றுத்தா, போராடு போராடு கொவிட் கொள்ளை நோயால் அரசியல் இலாபம் பார்த்த அரசை எதிர்த்து போராடு, மிதிக்காதே மிதிக்காதே  வைத்திய துறைஊழியர்களை மதிக்காவிட்டாலும் மிதிக்காதே, 2006 ஆண்டில் முன்வைக்கப்பட்ட மகிந்த சிந்தனையை பற்றி பரிசீலி,  போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதே, 

எங்கள் சேவைக்குரிய உரிமைகளை தந்துவிடு, போலி மருத்துவத்தை கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றாதே, எமது கடமைகளை செய்து மக்களை காப்பாற்ற விழித்திடு, மருத்துவ மாபியா கொள்ளைகளை நிறுத்து, பாடசாலை மாணவர்களுக்கு  இலவசமாக முககவசம் வழங்கு, பொது மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்று, 12 வருடத்தில் முதலாம் தர பதவி உயர்வு வழங்கு, விசேட கடமை கொடுப்பனவை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கு, 

நடைமுறைப்படுத்துமாறும், பறிக்கப்பட்ட பதவிநிலை உத்தியோகத்தர் தகுதியை மீண்டும் வழங்கு, மேலதிக நேரத்திற்கான நியாயமான அலகு கொடுப்பனவை வழங்கு தாதி உத்தியோகத்தர்கள் தமது பதவி உயர்வு தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி வழங்கியபோதும் இதுவரை சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அங்கிருந்து கோவிந்தன் வீதிவழியாக மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பிநிலையம் சென்று அங்கிருந்து நகர் மணிக்கூட்டுக் கோபுரத்தையடைந்து  அங்கிருந்து மட்டு காவல் நிலைய வீதி சுற்றுவட்டத்தையடைந்து பின்னர் அங்கிருந்து கோட்டமுளை பாலம் ஊடாக காந்தி பூங்காவரை சென்றனர் .

இதன் பின்னர் அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார துறையினர் பிற்பகல் ஒரு மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.