நாணய நிதிய அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது!- ஜனாதிபதி ரணில் வரவேற்பு!

337424589 1301697673715279 8909406912462509175 n
337424589 1301697673715279 8909406912462509175 n

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் உதவி வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டு வரவேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் வரலாற்றில் இதுவொரு மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-“இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்துக்கு இதனைவிட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவால் எமது திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.தொடக்கத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் எங்கள் கடன் வழங்குபவர்களுடனும் நாங்கள் நடத்திய அனைத்து பேச்சு முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஜூலை மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து, இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி, நிலையான கடன் நிலையை அடைவதே எனது முன்னுரிமையாக இருந்தது. அதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்தோம்.ஆனால், நமது சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்தவும், பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களை பாதுகாக்கவும், ஊழலை முற்றாக ஒழிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, சர்வதேச அளவில் கவர்ச்சிகரமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.இந்த நோக்கை அடைவதற்கு சர்வதேச நாண நிதியத்தின் திட்டம் மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கும் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்புபட்டிருக்கின்றோம்.

மேலும் எங்கள் பணி முன்னோக்கிச் செல்லும் சூழலில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் எமது கடன் வழங்குநர்களை ஊக்குவிக்கின்றேன்.சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கும் இன்றியமையாததாக இருக்கும். மேலும் முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் திறமைகளுக்கு இலங்கை ஒரு ஈர்ப்புள்ள நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கும்” – என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.