தமிழகத்தில் தீவிரமாகியுள்ள கொரோனா: விசேட குழுவை அனுப்பியது மத்திய அரசு

202006100231551682 Where did the corona originate in India Bengaluru SECVPF
202006100231551682 Where did the corona originate in India Bengaluru SECVPF

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் இதுகுறித்த தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்யும் பொருட்டு மத்திய குழுவொன்று தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளது.

சிறப்பு விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) மாலை சென்னைக்கு விஜயம் செய்யும் இந்தக் குழு 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் கள ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் குழுவில், மத்திய அரசின் IAS அதிகாரிகளான ஆர்த்தி அகுஜா, சுபோத் யாதவா மற்றும் மத்திய அரச துறையில் பணியாற்றும் தமிழக IAS அதிகாரி ராஜேந்திர ரத்னு ஆகியோருடன் மருத்துவ நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய குழுவினரின் ஆய்வு முடிந்ததும் அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்கள்.

மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது.

இதேவேளை, இவ்வாறு மத்திய ஆய்வுக் குழு தமிழகத்தில் இரண்டு முறை ஏற்கனவே ஆய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் இது மூன்றாவது குழுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவியுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் நேற்று இரவு நிலைவரப்படி அங்கு இதுவரை ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை அங்கு ஆயிரத்து 575 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினாலும் பிளாஸ்மா சிகிச்சைகள் மூலம் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதுடன் இதுவரை 71 ஆயிரத்து 116 தொற்றிலிருந்து மீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.