19 ஐ ஒழித்தால் கூட்டமைப்பு அதை எதிர்க்கும் – அரசை எச்சரிக்கிறார் சுமந்திரன்

IMG 20200903 WA0007

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய  அரசாங்கம் இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு – ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் தமது அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது உரையில்,

எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத்தில், அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரே தேர்தலில் பெற்றுள்ளனர். யுத்த வெற்றிக்கு பின்னர் வந்த 2010 தேர்தலில் கூட, மூன்றில் இரண்டை பெறவில்லை. பின்னர் பணம் கொடுத்து பெற்றனர். எங்களது பலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19வது திருத்தத்தை உருவாக்கினோம்; சுமந்திரன்

19 ஐ ஒழித்தால் கூட்டமைப்பு அதை எதிர்க்கும் – அரசை எச்சரிக்கிறார் சுமந்திரன்

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Donnerstag, 3. September 2020

இப்போது புதிய அரசமைப்பை உருவாக்க அரசு முயற்சிக்கிறது. அதற்கு முன்னதாக 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து, 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மிக விரைவாக அதை செய்கிறார்கள். சட்டமா அதிபருக்கு வரைபை சென்ற வாரமே அனுப்பிவிட்டனர். சட்டமா அதிபர், சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்றக்கூடியது என தனது கருத்தை சொல்லியுள்ளார்.

2015ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, 19 ஆவது திருத்தத்தை கொண்டுவர நான்கைந்து மாதங்களிற்கு மேல் சென்றது. அது 18 ஆவது திருத்தத்தை அகற்றி, 17வது திருத்தத்தை கொண்டு வருவதுதான். ஆனால் நான்கைந்து மாதங்கள் எடுத்தது. இவர்களிற்கு நான்கைந்து வாரங்கள் கூட தேவையில்லை. சிலருக்கு சரியானதை செய்வதற்கு பயம். இவர்களிற்கோ பிழையானதை செய்யவும் பயமே கிடையாது. அப்படியான அரசாங்கத்தையே எதிர்கொள்கிறோம்.

19 ஆவது திருத்தத்தை அகற்றுவது, நாட்டை மோசமான ஜனநாயக விரோத பாதையிலே கொண்டு செல்லும் வழி. இதை நாங்கள் திரும்பத் திரும்ப அரசாங்கத்திற்கு சொல்கிறோம். ஜனநாயகத்தை மேம்படுத்த, இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக, நல்லாட்சி தத்துவங்களை உள்ளடக்கியதாக அரைவாசி தூரம் சென்வதற்கென கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம். அது முழு தூரமும் சென்றிருந்தால் நாங்கள் இயற்றிய  அரசமைப்பு அமுலுக்கு வந்திருக்கும். அதற்கு முன்னர் எல்லாம் கவிழ்ந்து கொட்டுப்பட்டு, இருக்கின்ற அந்த அரைவாசித்தூரம் சென்றதையும் இல்லாதொழிக்கும் பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இது நாட்டுக்கு கேடு. ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்பதை அரசுக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம். ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்ட எந்த அரசும் நிலைத்து நின்றதில்லை.

தேர்தலின் பின்னர் ஜனாதிபதி உரையாற்றியபோது, முதலில் 19வது திருத்தத்தை அமுல்படுத்துவதாகவும், பின்னர் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதாகவும் சொன்னார். இந்த நாட்டுக்கு தேவையானது புதிய  அரசமைப்பு. ஒரு நாட்டின்  அரசமைப்பு என்பது வெறும் சட்டமல்ல. அந்த நாட்டு மக்கள் தமக்குள் செய்து கொள்ளும் உடன்பாடு. அதை சமூக ஒப்பந்தம் என்பார்கள்.

இந்த நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சினை அப்படியான சமூக ஒப்பந்தம் இல்லாமை. அது பேரினவாத சிந்தனையினால், பெரும்பான்மை ஆட்சியினால், கூடுதலான மக்கள் ஒரு பக்கம் இருக்கின்ற காரணத்தினால் – அந்த வாக்கு பலத்தினால் தமக்கு தேவையான விதத்தில்  அரசமைப்பை  உருவாக்கியதால் வந்த பிரச்சினை.

எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள ஒரே காரணத்தினால், தாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதை நிரூபிக்க முடியாமல் தமது இறைமையை விட்டுக்கொடுக்க வேண்டியதாக மற்றைய மக்கள் இருக்கும் துர்பாக்கியமான நிலைமையின் காரணமாகவே இத்தனை இலட்சம் மக்கள் தமது உயிர்களை பலி கொடுத்தனர். பல தசாப்தங்களாக நாடு முழுவதும் போர்க்களமாக இருந்தது. அதை சரி செய்ய வேண்டுமென்றால், நாட்டுக்கு புதிய  அரசமைப்பு தேவை.

அது ஓர் இனத்திற்கான அரசியலமைப்பாக இருக்க முடியாது. அனைத்து மக்களும் இணங்கும் சமூக ஒப்பந்தமாக  அரசமைப்பு இருக்க வேண்டும். அதைத்தான் இந்த அரசு செய்ய வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நன்மைக்காக உபயோகிக்க வேண்டிய ஒரு தார்மீக கடப்பாடு அரசுக்குள்ளது. அதை அவர்கள் செய்ய வேண்டுமென்ற சவாலை நாம் அரசின் முன் வைக்கிறோம்.

அந்த துணிவு அவர்களிற்கு வேண்டும். அதை செய்ய துணிவார்களாக இருந்தால் எமது ஆதரவு நிச்சயம் அந்த செயலுக்கு இருக்கும். தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் அதை செய்து முடித்தால், நாட்டிற்கு தேவையான சமூக ஒப்பந்தமாக மிளிரும் – அதை செய்தால் நாடு சுபீட்சமடையும். இல்லையெனில் நாடு திரும்பவும் அதலபாதாளத்தில் தள்ளப்படும் -என்றார்.