கட்சி பேதங்களை கடந்து நிவாரண பணிகள் முன்னெடுப்பு

srinesan1
srinesan1

கட்சி பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தினை முன்னிறுத்தி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வந்தாறுமூலை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தில் அமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கியதன் பின்னர் கருத்து தெரிவிக்கையில் ;

நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் கைக்குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் மற்றும் இயலுமையற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் போர்வைகள், பாய்கள், நுளம்பு வலைகள் என்பன அதிகமாக தேவைப்படுகின்றன.

அதுமட்டுமன்றி மழை நீர் முற்று முழுதாக வடிந்தோடாத காரணத்தினால் நோய்தொற்றுக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. குறிப்பாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன அதற்காக புகைவிசுறுதல் போன்ற செயற்பாடுகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், தொண்டர் குழுக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் வழங்கி வருகின்றார்கள். இவ்விடயத்தில் சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும் ஏனெனில் சிலவேளைகளில் அதன் ஊடாகவும் தொற்று நோய்கள் மற்றும் ஒவ்வாமைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன.

குறிப்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு, கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகளை வழங்கும் பணியாளர்கள் எனப் பலர் அர்ப்பணிப்புடனான சேவைகளை வழங்கி வருகின்றார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முக்கியமாக அனர்த்த வேளைகளில் அரசியல் பிரமுகர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தினை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு நிவாரண உதவிகளை வழங்கும் போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவது போல் உறவினர் வீடுகளில் தங்கியிருப்போருக்கும் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.