வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

DSC05801
DSC05801

வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் 5 வயது சிறுமி ஒருவர் டெங்கு நோயால் மரணமடைந்துள்ளதுடன் 792 பேர் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை அவதானிக்க முடிகிறது.

செப்டெம்பர் மாதத்தில் 35 ஆக காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒக்டோபர் மாதத்தில் 88 ஆக அதிகரித்து காணப்பட்டது. பருவ கால மழையைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதத்தில் 264 ஆக அதிகரித்துள்ளதுடன் டிசம்பர் மாதம் இதுவரை 202 ஆக காணப்படுகின்றது.

டெங்கு நோயைப் பெருக்கும் நுளம்புகளின் பெருக்கமும் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றமையினால் நகரசபைக்குட்பட்ட பகுதியை 9 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியையும் ஒரு சுகாதார வைத்திய அதிகாரியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கி குழுக்களை உருவாக்கி டெங்கினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வர்த்தக சங்கத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இதனை ஆறு வாரத்திற்கு முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள், அரச திணைக்களங்கள், அரச விடுதிகள் என்பன டெங்கு ஒழிப்பிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் அதனை சரியாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.