நாடாளுமன்றத்தை கூட்டவே முடியாது! – கோட்டா பாணியில் மஹிந்தவும் விளக்கவுரை

images 9
images 9

கொரோனா என்ற கொடிய வைரஸை இல்லாதொழிக்க வேண்டிய இந்த வேளையில் மீண்டும் நாடாளுமன்றத்தைக்  கூட்டுவதனால் எவ்வித பயனும் ஏற்படாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“பயங்கரவாதம் இருந்த காலப்பகுதியில் 20, 30 வருடங்களுக்கு முகாம்களில் வாழ்ந்திருக்கின்றோம். பிள்ளைகளுடன் மரண பயத்தில் நடு இரவில் இலை குழைகளை விரித்தும் உறங்கியிருக்கின்றோம். அவ்வாறு தம்மை அர்ப்பணித்த மக்களுக்கு நாட்டுக்காக இந்தக் காலப்பகுதியில் வீட்டில் இருப்பது பெரிய விடயமில்லை என நான் நினைக்கின்றேன்” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் வாழ்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது இந்தக் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முறையிலேயே உள்ளது. எங்களது அவதானம், எங்களது அர்பணிப்பு, ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையில்தான் இவ்வாறான பாரிய நோய்த் தொற்றில் இருந்து நாங்கள் வாழ்வதா, சாவதா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

அதனால்தான் இந்த நோய்த் தொற்று உலகுக்குத் தெரியவந்த சந்தர்ப்பத்தில் இருந்து ஜனாதிபதியுடன் எமது அரசும் மக்களின் வாழ்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி செயற்பட்டுள்ளது.

இந்தநிலையைப்  புரிந்துகொண்டதால்தான் சீனாவில் வூஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கையர்களை, உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னர் விமானம் ஒன்றை அனுப்பி எமது நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தோம்.

அவர்களை அழைத்துவரும்போது நாம் எமது நாட்டில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைத்து விட்டோம். அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து இலங்கைக்கு வரும் நூற்றுக்கணக்கானவர்களைத் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் பலவற்றுக்கு மிகவும் குறுகிய காலத்தில் அனுப்புவதற்கு ஏற்றவகையில் மத்திய நிலையங்களை ஏற்படுத்தினோம். தற்போது ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தக் கூடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் சுமார் 40
வரை எம்மால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அங்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் எவ்வித குறையும் இன்றி 14 நாட்களும் சிறந்த  பராமரிக்கப்படுகின்றார்கள்.

அதேபோன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியசாலையை நாங்கள் 6
நாட்களில் வெலிகந்தையில் நிர்மாணித்தோம். அது மாத்திரமல்ல, இலங்கைக்கு வருபவர்களை பரிசோதனை செய்து நோய் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய
ஆயிரக்கணக்கான நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று வீடுகளிலேயே வைத்து தனிமைப்படுத்தலை மேற்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

நாங்கள், முதல் கொரோனா நோயாளியை அடையாளம் கண்டவுடனேயே சகல பாடசாலைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். இது தொடர்பில் ஜனாதிபதி விசேட படையணியொன்றை ஆசிய வலய நாடுகளில் முதலில்
ஸ்தாபித்தது நாங்களே.

நாங்கள் போர்க்காலத்தில்கூட முழுமையாக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் சுகாதாரத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு
ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினோம்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டமையால் எங்களது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், வியாபார நிலையங்கள் அதேபோன்று அரச காரியாலயங்களை மூடுவதற்கான நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டாலும் மக்களின் வாழ்வியலுக்கு எவ்வித குறைவும் ஏற்படாத வகையில் அவர்களின் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான நிலையைப் பேணும் மிக முக்கிய பொறுப்பை அரசு நிறைவேற்றி வருகின்றது. மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப்பணிகளை ஜனாதிபதி செயலணி ஊடாக வழங்கி வருகின்றது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி தற்போது சிறிய மற்றும் மத்தியதர வியாபாரங்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர் அரசின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை. அவ்வாறான நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தைக்  
கூட்டுவதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது என இறையாண்மையுள்ள மக்கள் இப்போது எங்கள் எல்லோரிடமும் கேட்கின்றார்கள்.

கொரோனாவை இல்லாதொழிக்கும் இந்த நடவடிக்கையில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு எனது அன்புக்குரிய மக்களிடம் கேட்கின்றேன். வேறு நாடுகள் முகங்கொடுத்துள்ள அனர்த்தங்களைப் போன்று முகங்கொடுக்காமல் மீண்டெழ முடியுமென நான் நினைக்கின்றேன். நாங்கள் முன்னேறிய இனத்தவர்கள் என்ற அடிப்படையில் மாத்திரமன்றி சுகதேகிகளான இனத்தவர்களாக மீண்டெழ வேண்டும்” – என்றார்.