முல்லைத்தீவு மாவட்டத்தில் விபரம் திரட்டும் படையினர் !

th 12
th 12

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் மக்களின் காணிவிபரங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் ஐந்து பிரதேச சபைகளின் கீழ் உள்ள கிராமங்களில் இராணுவ உடை அணிந்து செல்லும் படை அதிகாரிகள் விவசாய அமைப்புக்களின் தலைவர் , மற்றும் கிராம அமைப்பினர் ஊடாக மக்களின் வீடுகளுக்கு சென்று காணி உறுதிப்பத்திரத்தினை பார்வையிட்டு அது தொடர்பிலான விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் வீடுகளுக்கு செல்லும்படையினர் தாங்கள் வீடுகளில் இருப்பவர்களின் விபரங்கள் திரட்டுகின்றோம் என்று மக்களிடம் தெரிவித்து அடையாள அட்டை இலக்கம் பெயர் விபரங்கள் காணிகளின் பதிவுகள் ஒவ்வொரு வீடுகளினதும் (GPS) புள்ளிகளையும் (gps coordinates)பதிந்து வருகின்றார்கள்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வீடுகளுக்கு செல்லும் படையினர் மக்களின் காணி உறுதிப்பத்திரத்தினை வாங்கி பார்வையிட்டு பதிந்துள்ளதுடன் வேறு எங்கு காணி இருக்கின்றது? ஒரு குடும்பத்தினருக்கு மொத்தமாக எங்கு எங்கு எவ்வளவு காணிகள் இருக்கின்றன என்ற பதிவினை மேற்கொள்வதுடன் பயன்பாடு அற்று இருக்கும் காணிகளாயின் அது தொடர்பிலான விபரங்களையும் திரட்டிவருகின்றார்கள்.

இது தொடர்பில் பதிவினை மேற்கொண்ட படை அதிகாரிகளிடம் மக்கள் கேட்டபோது விவசாய செய்கைக்கு படையினர் உதவப்போவதாக கூறியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேத்திற்கு உட்பட்பட்ட பகுதிகளில் கமக்கார மற்றும் விவசாய அமைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கு செல்லும் படையினர் காணி அத்தாட்சி பத்திரம் மற்றும் துண்டுகளை பார்வையிட்டு பதிவு செய்வதுடன் வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்ற பதிவினையும் குடும்பத்தலைவரின் பெயர் விபரத்தினையும் கேட்டுவருவதுடன் காணி அத்தாட்சிபத்திரத்தில் உள்ள பெயர் மற்றும் அதன் பதிவு இலக்கம் என்பனவற்றையும் பதிவு செய்து வருகின்றார்கள்.

வேறு சில இடங்களில் கிராம மட்ட அமைப்புக்கள் ஊடாக மக்களை குடும்ப அட்டையுடன் நிலக்கடலை மற்றும் விதை தானியங்கள் மானியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து மக்களை ஒரு இடத்திற்கு வரசொல்லி ஒவ்வொருவராக குடும்ப அட்டை பதிவினை மேற்கொள்வதுடன் விவசாய காணி தொடர்பான விபரங்களையும் திரட்டிவருகின்றார்கள்.

சிவில் சமூக செயற்பாட்டில் படையினரின் இந்த பதிவு நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய்,மாந்தைகிழக்கு, ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று பிரதேசங்களில் இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.