ஆனைவிழுந்தான் வயற்காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் – வனப்பாதுகாவலர் நாயகம் உறுதி

405ef13c 180c 4cdf b523 6009580b772d
405ef13c 180c 4cdf b523 6009580b772d

வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆனைவிழுந்தான் வயற்காணிகளை உடனடியாக அம்மக்களுக்கு மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனப்பாதுகாவலர் நாயகம் மகிந்த செனவிரத்ன உறுதியளித்துள்ளார்.

ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் இன்றைய தினம் கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று வனப்பாதுகாவலர் நாயகம் மகிந்த செனவிரத்ன அவர்களுடன் கலந்துரையாடியதோடு, குறித்த காணிகளை விடுவிக்கக்கோரி ஆனைவிழுந்தான் மக்கள் சார்பில் எழுத்து மூலக் கோரிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தனர் .

அக்காணிகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய போதே வனப்பாதுகாவலர் நாயகம் குறித்த காணிகளை உடனடியாக விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

1984ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆனைவிழுந்தான் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இவ்வயற்காணிகளில் அவர்கள் தொடர்ச்சியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதியுத்தத்தின் பின்னரான 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற காலப்பகுதியில் குறித்த காணிகளை வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினர் தமக்குரியதாக அடையாளப்படுத்தி அம்மக்களின் வாழ்வாதார செயற்றிட்டம் தடுக்கப்பட்டிருந்தது.

இக்காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கடந்த 2019.07.29 ஆம் திகதிய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, 2020.05.04 ஆம் திகதி நடைபெற்ற பிரதமருடனான கலந்துரையாடலிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர் 2020.06.06 ஆம் திகதி ஆனைவிழுந்தான் வயற்காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, அம்மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர்,இன்றையதினம் வனப்பாதுகாவலர் நாயகத்தை நேரில் சென்று சந்தித்தபோது இம்முடிவு எட்டப்பட்டுள்ளமையை இம்மக்கள் கடந்த பத்து ஆண்டுகளாக முன்வைத்த கோரிக்கைகளுக்கும், அக்காணிகளை விடுவிப்பதற்கு தொடர்ச்சியாக பல அழுத்தங்களை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது .