வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தடன் தொடர்புடைய நபர்கள் தங்கியிருந்த வீடு முற்றுகை

sword attack 1600x600 1
sword attack 1600x600 1

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்  முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

நீர்வேலி கரந்தனில் உள்ள அந்த வீட்டின் வாழைத் தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார்  குறிப்பிட்டனர்.   

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ்  பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். 
அவர்களில் பிரதான சந்தேக நபரான மருதனார்மடம் ஜெகன் அல்லது கைலாயம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்செயலுக்கு தயாராகும் வீடு முற்றுகையிடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை  உத்தியோகத்தர் மீதே நேற்றுக்  காலை தாக்குதல் நடத்தப்பட்டது. 
அந்த உத்தியோகத்தர் வழமை போன்று நேற்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து  மோட்டார் சைக்கிள் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

தாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகத்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார். அதன் போதும் , இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டதுடன் , வெளியில் வந்து , வேறொருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குல் மேற்கொண்டு அதனை சேதமாக்கி விட்டு தப்பி சென்றனர். 

தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் , தெரிவத்தாட்சி அலுவலகமும் செயற்பட்டு வருகின்றது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து மாவட்ட செயலகம் தெரிவத்தாட்சி அலுவலகம் எனும் ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. 

இந்நிலையிலையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வன்முறை கும்பல் மோட்டர் சைக்கிள் வந்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது