கூட்டமைப்பை விட்டு வெளியேறியோர் வென்றார்கள் என்ற சரித்திரம் இல்லை ; சரவணபவன்

101003700 160460055521932 2077934271913263104 o
101003700 160460055521932 2077934271913263104 o

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கூடு. இந்தக் கூட்டை எவராலும் உடைக்கவோ அழிக்கவோ முடியாது. அழிக்க முற்பட்டவர்கள் எல்லோரும் அழிந்து போனமையே வரலாறு.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

யாழ். ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது தாயகப் பிரதேசம் சிங்களப் பேரினவாதிகளாலும் அவர்களது கொந்துராத்துக்காரர்களாலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூறையாடப்படுகின்றது. நல்லூரைத் தம் ஊர் எனச் சொந்தம் கொண்டாட முயல்பவர்கள், கந்தரோடைக்கும் ஒரு கதையை கூறிக்கொண்டு வருவார்கள். எனவே, நாங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கத் தயாராக இருக்க வேண்டும்.

இந்த அரசு பேரினவாதிகளால் கட்டமைக்கப்பட்ட அரசு. எனவே, பேரினவாத செயற்பாடுகள் தடையின்றி இடம்பெற வழிவகுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைக்க வேண்டும், தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என்பதில் சிங்கள தேசம் ஒற்றுமையாகவுள்ளது. ஆனால், நாம்தான் நமக்குள் முரண்பட்டு நிற்கின்றோம்.

கூட்டமைப்பிலிருந்து நாம் யாரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது கிடையாது. தாமாகவே அனைவரும் வெளியேறினார்கள்.

முக்கியமாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் தமது இருப்பு கேள்விக்குறியானதுடன் வெளியேறினார்கள்.

எனினும், ‘வீடு’ எனும் இந்தக் கூட்டை விட்டு வெளியேறியவர்கள் வென்றனர் என்ற சரித்திரம் கிடையாது. இனிமேலும் அப்படி ஒரு சரித்திரம் உருவாகப்போவதுமில்லை. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எமது மக்கள் சார்பாகப் பேரம் பேசும் சக்தியாக உருவாக முடியும்” – என்றார்