பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

1586059506 rain 2
1586059506 rain 2

நாடு முழுவதும், குறிப்பாக ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

களுத்துறையில் இருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.