தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சி ; ரிஷாட்

Risad
Risad

பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்  உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”குருநாகல் மாவட்டத்துக்கு இன்று வருவேனா என்பது, நேற்று மாலை வரை எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. வரமுடியுமா அல்லது வரவிடுவார்களா? என்று எதுவுமே தெரியாத நிலையில் இருந்தேன். கட்சியின் தவிசாளர் அமீர் அலியுடன் தொடர்புகொண்டு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில், என் சார்பில் கலந்துகொள்ள ஆயத்தமாகுமாறும் வேண்டினேன்.

நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கு ஏதாவது வழக்கு இருக்கின்றதா? அல்லது தவறு ஏதும் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றதா? 17 வருட அமைச்சுப் பதவி உட்பட, சுமார் 20 வருடகால அரசியலில், என்னைப் பற்றி போலியான கதைகளை பரப்பினார்களேயொழிய, எந்தக் குற்றச்சாட்டும் பொலிஸில் இதுவரை இல்லை.

மக்களுக்கு காணி வழங்கியதற்காக இனவாதிகள் வழக்கிட்டனர். சமூகத்துக்காக பேசியதனால் மதவாதிகள் நீதிமன்றத்தை நாடினர். வேறு எந்த தனிப்பட்ட வழக்கும் எனக்கு இதுவரை கிடையாது.

சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. பேசியதில்லை. தொலைபேசியில் கூட கதைத்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே அந்தக் கயவனின் செயலுடன் என்னையும் தொடர்புபடுத்தி, சிறையில் அடைக்க சதிகள் இடம்பெறுகின்றன.

தேர்தலுக்கு முன்னர் என்னை அடைக்கலாம். எனினும், “இறைவன் பாதுகாப்பான்” என்ற நம்பிக்கை எமக்குண்டு. நமது சமுதாயத்தை அடிமைப்படுத்துவதற்காகவும் பயமுறுத்துவதற்காகவும், சமூகத் தலைமைகளாக அங்கீகரிக்கப்பட்ட எம்மை அச்சுறுத்தி, அடக்கப் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, சிறையில் அடைக்கவும் முயற்சிக்கின்றனர். எம்மை அடைப்பதன் மூலம், சமுதாயத்தை பயமுறுத்த முடியும் எனவும் திட்டமிடுகின்றனர்.  என்றார்.