யாழிற்கு தேர்தல்கள் மேற்பார்வை அதிகாரியை நியமிப்பதில் சிக்கல்

தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழு

யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல்கள் மேற்பார்வை அதிகாரியொருவரை நியமிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னதாக யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கு பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.அச்சுதனை நியமிப்பதற்கு ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், அநாமதேய அதிருப்திகள் வெளியிடப்பட்டமையால் அம்முயற்சி கைவிடப்பட்டதோடு அச்சுதனும் அப்பணியை பொறுப்பெடுப்பதை விரும்பியிருக்கவில்லை.

அதனையடுத்து ஓய்வு நிலை மேலதிக தேர்தள் ஆணiயாளரும் தற்போது ஆலோசகராக பணியாற்றி வருபவருமான எம்.எம்.மொஹமட்டை நியமிப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்திருந்தது. இருப்பினும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சி.வி.விக்கினேஸ்வரன் அவர் தொடர்பில் வெளியிட்டுள்ள கடுமையான விமர்சனங்களை அடுத்து எம்.எம்.மொஹமட்டும் அப்பணியை பொறுப்பேற்பதிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது மேலதிக ஆணையாளராக பதவியிருந்த இவர் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான மேற்பார்வை அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். இந்நிலையில் தற்போது, யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான தமிழ் மொழி பேசும் மேற்பார்வை அதிகாரியொருவரை நியமிப்பதில் ஆணைக்குழுவிற்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த ஒருவர் அப்பணிக்காக ஆணைகுழுவினால் நியமிக்கப்படவுள்ளதாக அறியவருகின்றபோதும் செய்தி அச்சுக்கு ஏறும் வரையில் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இதேவேளை, தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்பான கபே, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அதிகளவு வன்முறைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.