ஆணை கிடைத்தால் திருமலையை தாமதமின்றி வடக்குடன் இணைப்போம்

Tirumala Map
Tirumala Map

திருமலை மக்கள் ஆணை வழங்குகின்றபோது திருகோணமலையை வடக்குடன் தொடுக்கும் கொக்கிளாய்ப் பாலத்தினைக் கட்டி முடிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்போம் என்று அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவரும், அக்கட்சியின் தலைமை வேட்பாளருமான கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

திருகோணமலையின் வடக்கு எல்லையான தென்னமரவடி 1984ஆம் ஆண்டில் முற்றாக அழிக்கப்பட்டு அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. அதனை மீளப்பெற்று மீள்குடியேற்றத்தை 2011ஆம் ஆண்டில் ஆரம்பித்ததோடு முதலமைச்சர் சந்திரகாந்தனின் அனுசரணையுடன் அக்கிராமத்திற்கான வீதியைப் புனரமைத்து பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தோம். 

2007இல் கிழக்கில் யுத்தம் முடியும் தறுவாயில் சம்பூர் பிரதேசத்தில் வாழ்ந்த அனைத்துத் தமிழர்களுடைய வீடுகளும் நிர்மூலமாக்கப்பட்டு அம்மக்கள் துரத்தப்பட்டதோடு அப்பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீள்குடியேற்றம் எதுவும் இடம் பெறாவிட்டால் முழுப் பிரதேசத்தையும் தமிழர் இழக்க வேண்டிவரும் என்று உணர்ந்த எமது  கட்சி, ஒரு வியூகத்தைக் கையாண்டு சூடைக்குடா, நவரத்தினபுரம், கூனித்தீவு ஆகிய அதியுயர் பாதுகாப்பில் இருந்த கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து சம்பூர் பிரதேசம் முழுவதையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தோம். 

2007இல் கிழக்கில் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் சம்பூர் காளிகோவில் பெரிதாகப் பாதிக்கப்படாத நிலையில் யுத்தத்திற்குப் பிற்பாடு அப்பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் 2013ல் அக்கோவில் முழுமையாக சேதப்படுத்தப்பட்டது. அச்செயலுக்குப் பொறுப்பானவரும் 9 வருடங்கள் திருகோணமலை அரசாங்க அதிபராகப் பணியாற்றியவருமான இராணுவ அதிகாரியை வெளியேற்றும் கடினமான பணியையும் 2015இல் எமது கட்சியே நிறைவேற்றியது. 

இவ்வாறு ஆரவாரமின்றி நாம் முன்னெடுத்த பல விடயங்கள் இருக்கின்றன. ஆகவே திருமலையில் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்காக உரிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் தமிழர்களின் கனவான வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்றால் திருமலையிலிருந்து வடக்கினை இணைக்கும் ஒரு கிலோமீற்றர் நீளமான கொக்கிளாய் பாலம் நிர்மாணிக்கப்பட வேண்டும். அதனை செய்வதற்கு நாம் உரிய உபாயங்களைக் கொண்டிருக்கின்றோம். ஆகவே மக்கள் எமக்கான ஆணையை தரவேண்டும். 

அதுமட்டுமன்றி  70 ஆண்டுகளுக்கு மேலாக நகர சபையாக இருந்த திருகோணமலையை மாநகர சபையாகவும், உப்புவெளி பிரதேச சபையை நகர சபையாகவும் தரமுயர்த்துவோம். அத்துடன் மூதூர் பிரதேசத்தினுள் அடங்கியுள்ள மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, பட்டித்திடல், கங்குவேலி, பெருவெளி, இருதயபுரம், பாலத்தடிச்சேனை, பாரதிபுரம், மேன்காமம், பள்ளிக்குடியிருப்பு, நல்லூர், சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரத்தினபுரம், கட்டைபறிச்சான் தெற்கு, சேனையுர், கட்டைபறிச்சான் வடக்கு, கடற்கரைச்சேனை ஆகிய 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் அடக்கியதான கொட்டியாபுரம் எனும் புதிய பிரதேச செயலகத்தினையும் பிரதேச சபையையும் உருவாக்கித் தருவோம் என்றார்.