இலங்கைக்கு ஏற்றுமதி செய்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் இங்கிலாந்து

108086187 colomboharbour 1
108086187 colomboharbour 1

நாட்டின் சுற்றாடல் மற்றும் சுகாதார சட்டங்களை மீறி இலங்கைக்கு ஏற்றுமதி செய்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ள இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தின் தலைவர் சட்டத்தரணி ரவீந்திரநாத் தாம்பரேயை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த கொள்கலன்களை ஏற்றுமதி செய்த இங்கிலாந்து நிறுவனத்திற்கு எதிரான விசாரணை முடிந்ததும் கழிவுக் கொள்கலன்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இலங்கைக்கு சரக்குக் கொள்கலன்களில் கழிவுப்பொருட்களை ஏற்றுமதி செய்த இங்கிலாந்து நிறுவனம் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய விசாரணை முடிந்ததும் திருப்பி அனுப்பும் நடைமுறைகள் தொடங்கும் என்றும் சுற்றுச்சூழல் நீதி மையத்தின் முக்கிய நோக்கம், நாட்டினுள் இருக்கும் கொள்கலன்களின் சிதைவைத் தடுப்பதற்காக கொள்கலன்களை விரைவில் திருப்பி அனுப்புவதாகும் என்றும் ரவீந்திரநாத் தாம்பரே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, சுமார் 240 கொள்கலன் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஒப்புதல் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டமை கண்டறியப்பட்டன.

அத்தோடு கொழும்பு துறைமுகத்தின் CICD முனையத்தில் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் காணப்பட்டன. இதனை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இங்கிலாந்திலிருந்து 2017 ஆம் ஆண்டு இவை இறக்குமதி செய்யப்பட்டன என்பது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது