நீர் மின் உற்பத்தி திட்டத்தின் தாமதத்தினால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு

36 1
36 1

மகாவலி ஆற்றில் கட்டப்படவுள்ள பெரிய அளவிலான நீர்மின் திட்டமான மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் 3.5 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத், தாமதத்தின் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் ஒரு நாளைக்கு சுமார் 5 மில்லியன் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது என்றார்.

மேலும் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் திட்டத்தை விரைந்து செயற்படுத்த கடந்த அரசாங்கம் முனைப்பு காட்டாதமையே தாமதத்திற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மொரகொல்ல நீர் மின் திட்டம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உலப்பனை பகுதியில் அமைந்துள்ளது. தற்போது, மகாவலி நதிப் படுகையில் ஏழு பெரிய நீர் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இவை மூலம் மொத்தம் 810 மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இவை தவிர, பல மினி ஹைட்ரோ பவர் ஆலைகள் இந்த ஆற்றின் குறுக்கே இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களாக கட்டப்பட்டுள்ளன, அவற்றில் இருந்து 10 மெகாவட்டிற்கும் குறைவான மின்சார உற்பத்தியையே நடைபெறுகின்றன.

இந்நிலையில் மொரகொல்ல மின் நிலைய திட்டம் செயற்படுத்தப்பட்டால் இரண்டு பிரான்சிஸ் விசையாழிகளில் இருந்து 30 மெகாவட் மின்சார உற்பத்தியை வழங்க கூடிய திறன் இருக்கும், இது ஆண்டுக்கு சுமார் 85 ஜிகாவட் மின்சார உற்பத்தியை வழங்கும்.

குறித்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் கொள்முதல் செயன்முறை 2016 இல் தொடங்கப்பட்டதுடன் 2022 ஆம் ஆண்டில் ஆலை செயற்படும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில், ஒரு அணையை உள்ளடக்கிய ஆலையின் முக்கிய சிவில் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்திற்காக ஒப்பந்தம் சீன நிறுவனமான Gezhouba Group Co. Ltd க்கு வழங்கப்பட்டது.

அந்தவகையில் திட்டத்தின் ஆரம்ப கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன, அணை, சுரங்கப்பாதை, மின் வீடு போன்றவற்றின் கட்டுமானம் தொடர்பான முக்கிய சிவில் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

அத்தோடு இந்த திட்டத்தின் இயந்திர மற்றும் மின்சார வசதிகள் ஒப்பந்தம் சீனாவின் டோங்ஃபாங் எலக்ட்ரிக் இன்டர்நஷனல் கோர்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் 2020 ஜூன் 30 அன்று கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையில் சிவில், மெக்கானிக்கல் மற்றும் மின் ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மேலும் திட்டத்தின் மின் வடிவமைப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கை மின்சார சபை இந்த திட்டத்தை முடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் நாட்டில் நிலவிய கோவிட் -19 நிலைமை காரணமாக கடந்த சில மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவது தாமதமானது என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.