காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தடை உத்தரவினால் தடுத்து நிறுத்தம்

batti
batti

மட்டக்களப்பு செங்கலடியில் இன்று(திங்கட்கிழமை) காலை வடகிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடாத்தவிருந்த போராட்டம் பொலிஸார் நீதிமன்றின் ஊடாக பெறப்பட்ட தடையுத்தரவினால் இடைநிறுத்தப்பட்டது.

வடகிழக்கில் உள்ள வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் இணைந்து செங்கலடி சந்தியில் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

யாழப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இந்த போராட்டங்களை முன்னெடுக்கவிருந்தனர்.

தற்போது தேர்தல் நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவாகவும் செயற்படுவோரை தெரிவுசெய்யவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லும் வகையிலும் இந்த போராட்டம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவிருந்தன.

இந்த நிலையில் இன்று காலை செங்கலடியில் வடகிழக்கின் எட்டு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒன்று கூடிய நிலையில் அங்கு வந்த பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குறித்த போராட்டத்தினை நடாத்த முடியாது எனவும் தெரிவித்தனர்.

இதன்போது வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவினை காட்டி போராட்டம் நடாத்தமுடியாது என தெரிவித்தனர்.

ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் ஊடாக இந்த தடையுத்தரவு ஏறாவூர் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.

தாம் போராட்டம் நடாத்துவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே சுகாதார பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் இது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் ஆனால் பொலிஸார் திட்டமிட்டு தமது போராட்டத்தினை முடக்கியுள்ளதாகவும் காணாமல்போனோர் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதன்போது அங்கிருந்து கலைந்து சென்ற காணாமல்போனோர் சங்க உறவினர்கள் மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் நடாத்தினர்.

இந்த நாட்டில் ஜனநாயக விழுமியங்களின் நிலையின்றே வெளிப்படுவதாகவும் எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சியமைக்கும் நிலையேற்பட்டால் அது முற்றாக குழிதோண்டி புதைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த அரசாங்கத்தின் மீதே கடத்தல்,காணாமல்செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக காணப்படுவதனால் அதனை மூடிமறைப்பதற்காக தம் மீதான இந்த அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.