தென்னிலங்கைக் கட்சிகளுக்கு வாக்களித்தால் இனவழிப்பை நாங்களே ஏற்றுக்கொண்டது போலாகிவிடும்

02 13
02 13

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்க்கட்சிகளை விடத் தென்னிலங்கைக் கட்சிகளே அதிகம் போட்டியிடுகின்றன. இலங்கையில் காலத்திற்குக் காலம் இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட கட்சிகளும் இனவழிப்பை மேற்கொண்ட கட்சிகளும் தமிழர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்ற நினைப்பில் இங்கே களமிறங்கியுள்ளன.

இக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் தமிழர்களாக இருந்தாலும் நாங்கள் வாக்களிப்பது தமிழின அழிப்பை நாங்களே ஏற்றுக்கொண்டது போலாகிவிடும். இது சர்வதேசத்திற்குப் பிழையான செய்தியையே சொல்லும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதன் தேர்தல் பரப்புரைக் கூட்டம் புத்தூர் கிழக்கில் கடந்த திங்கட்கிழமை (27.07.2020) நடைபெற்றபோதே முதன்மை வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எங்களது தமிழ்த் தலைமைகள் ஜனாதிபதித் தேர்தல்களின் போது சிங்கள அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோரிவந்துள்ளார்கள். ராஜபக்ஷ சகோதரர்களைப் போன்றே சரத்பொன்சேகா அவர்களும் தமிழினப் படுகொலைக் குற்றவாளிதான். ஆனாலும் யுத்தம் முடிந்த கையோடு அவரின் கைகளிலுள்ள ரத்தம் காய்வதற்கு முன்பாகவே அவருக்கு வாக்களிக்குமாறு எங்களது தலைவர்கள் வேண்டியிருந்தார்கள்.

தமிழ்த் தலைமைகள் ஆதரித்த மைத்திரிபால சிறிசேன அவர்களும் போரை முன்னெடுத்த அரசாங்கத்தில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற வகையில் இவரும் போர்க்குற்றவாளியே. எமது தலைமைகள் ஜனாதிபதியாக ஆக்குவதற்குக் கடும் பிரயத்தனம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இனப்படுகொலை யுத்தத்தை ஆதரித்தவர்தான். இனப்படுகொலையாளிகளுக்கு ஆதரவு கேட்பதை விடுத்துத் தமிழர் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தித் தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் ஒரு தனியான தேசம் என்பதை உலகத்திற்கு உறுதிபடத் தெரிவித்திருக்கமுடியும்.

காலத்திற்குக் காலம் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கப் பழக்கியதாலேயே பாராளுமன்றத் தேர்தல்களிலும் பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழ் மக்களில் ஒரு தொகையினர் அதன் விளைவுகளை அறியாது வாக்களித்து வருகின்றனர். இந்த நம்பிக்கையிலேயே இக்கட்சிகளும் தொடர்ந்தும் இங்கு போட்டியிட்டு வருகின்றன. இவர்களுக்கு வாக்களித்து இவர்கள் நிகழ்த்திய இனக்கலவரங்களையும் இனப்படுகொலையும் நாங்கள் ஏற்றுக் கொண்டவர்களாக ஆகிவிடக்கூடாது. எனவே இவர்களை அறவே நிராகரிப்போம் என்றும் தெரிவித்தார்.