வன்னி தேர்தல் தொகுதிக்கு 61 வாக்கெண்ணும் நிலையங்கள்

625.500.560.350.160.300.053.800.900.160.90 5 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 5 8

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 61 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், நான்காயிரத்து 200 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “வன்னியில் தபால்மூல வாக்குகள் 95 வீதம் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை 12 ஆயிரத்து 480பேர் தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். வன்னியில் இடம்பெயர்ந்த வாக்காளர்களாக ஆறாயிரத்து 278 பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐயாயிரத்து 707பேர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

அவர்களுக்காக 25 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த இடங்களில் வாக்களிப்பு இடம்பெற்றதன் பின்னர் அனைத்து வாக்குக்பெட்டிகளும் பாதுகாப்பான முறையில் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு எடுத்துவருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இதுவரையில் 78 சிறிய தேர்தல் முறைப்பாடுகளே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதேவேளை, நான்காயிரத்து 200 பொலிஸார் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதுடன் வவுனியாவில் மாத்திரம் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட அரச அலுவலர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கடந்த தேர்தல்களில் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலருக்கு கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் முடிவுகளை அறிவித்தோம். இம்முறை வாக்கெண்ணல் செயற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மோசடிகள் இடம்பெறாத வகையிலே இந்த செயற்பாடுகளை மேற்கோள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 18 வாக்கெண்ணும் நிலையங்களும் மன்னாரில் 15, முல்லைத்தீவில் 14 வாக்கெண்ணும் நிலையங்களும் 13 தபால் வாக்கெண்ணும் நிலையங்களும் இடம்பெயர்ந்த வாக்குகளை எண்ணுவதற்காக ஒரு நிலையமுமாக மொத்தம் 61 வாக்கெண்ணும் நிலையங்கள் வன்னியில் அமைக்கப்படும்.

அத்துடன், ஒரு வாக்காளர் எந்தப் பிரதேசத்தில் இருந்தாலும் அங்கிருந்தே வாக்களிப்பதற்கு உரியமுறையில் விண்ணப்பங்களை மேற்கொண்டால் தேர்தல் ஆணைக்குழு அவரது பாதுகாப்பு விடயத்தை கருத்திற்கொண்டு வாக்களிப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளும்.

அதற்கமையவே, வன்னியிலிருந்து புத்தளம் பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்களிற்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் அந்த கட்டளை எமக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தும் தெரிவித்தாட்சி அலுவலர்களாக நாம் இருப்போம்” என்றார்