வட,கிழக்கு பிரதிநிதித்துவ பலத்தை வலுப்படுத்த ஒருங்கிணைந்த மக்கள் ஆணையை கோருகிறது கூட்டமைப்பு!

TNA todayjaffna
TNA todayjaffna

9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலானது ஒரு இக்கட்டான காலப்பகுதியில் நடைபெறுகின்றது. திருப்புமுனையாக அமையவுள்ள இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து தமது ஆணையை வழங்க வேண்டும். அதன் மூலம் வடகிழக்கில் தமது பிரதிநிதித்துவ பலத்தினை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், 

நாட்டில் நடைபெறுகின்ற தற்போதைய ஆட்சியினை பார்க்கின்றனபோது அது எவ்விதமான அடுத்து வரும் காலப்பகுதியில் அமையப்போகின்றது என்பது தெளிவாகின்றது. இவ்வாறான நிலையில் ஒரு இக்கட்டான தருணத்தில் நடைபெறுகின்ற இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையப்போகின்றது. 

அதற்காக தமிழ் மக்கள் தமது வாக்குகளை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்து வடக்கு கிழக்கில் தமிழர்களின் ஆணைபெற்ற பலமான பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட ஒரு தரப்பு கூட்டமைப்பே என்பதை உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.  

அதன் ஊடாகவே அடுத்தக்கட்டமாக நீண்டகாலமாக நீடித்துக்கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வினை பெறுவதற்கான பேரம் பேசல்களையும் அழுத்தங்களை வழங்க முடியும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து அவர்களின் பிரதிநிதித்துவங்களை வலுவிழக்கச் செய்வதற்கான பல்வேறு தரப்புக்களும் தற்போது முயற்சித்து வருகின்றார்கள். பல்வேறு புனை கதைகளையும், சலுகைகளையும் வழங்குவதாக கூறுகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைத்து பொய்யான பரப்புரைகளை செய்கின்றார்கள். இவை அனைத்துமே சுய இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டவையே. 

ஆகவே தமிழ் மக்கள் இவ்விதமான பொய்யான மாயைகளுக்குள் சிக்காது தமக்காக உண்மையாக, நேர்மையாக, விட்டுக்கொடுப்பற்ற ரீதியில் செயற்பட்ட, செயற்படவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே பெருவாரியான ஆதரவினை வழங்க வேண்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்காலத்தினையும், இருப்பினையும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்பதை தவறியேனும் மறந்து விடக்கூடாது என்றார்.