மறுவாக்கெடுப்பு நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

Ranjith Madduma Bandara
Ranjith Madduma Bandara

நிகவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனை உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெடுப்பு நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மூன்று வாக்குசாவடிகளுக்கும் பிரதமரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களுடன் நுழைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக பொதுத் தேர்தல்கள் வாக்குப்பதிவின் போது மஹிந்த ராஜபக்ஷ 100 வாக்காளர்களுடன் மூன்று வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த சம்பவம் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை அப்பட்டமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தகைய வேட்பாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்கெடுப்பை நடத்த நாளை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரிக்கப்படாத ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்களுடன் நிகவரெட்டிய பகுதியில் பயணித்ததாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்தோடு மகாசென் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்குச் சாவடிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்ததாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையமும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.