தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை அவசரமாக கூட்டி ஆராய வேண்டும்

20200807 103904
20200807 103904

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாதையை மாற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்புகின்றனர் எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாற்றம் வேண்டும். இந்த நிலையில் எமது கட்சியின் அரசியல் எதிர்காலம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் சம்மந்தமாகவும் கட்சிக்காகவா மக்கள் மக்களுக்காகவா கட்சி என்ற ரீதியிலே கூடி ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை அவசரமாக கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அதன் பங்காளி கட்சியான ரெலோ கட்சியின் உபதலைவர் கோவிந்தன் கருணாகரன் தேர்தலில் வெற்றி பெற்ற பின் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் அதில் ஒன்று என்னையும் இந்த மாவட்ட மக்கள் தெரிவு செய்துள்ளனர். அந்த வகையில் எனக்கும் தேசியத்துக்கும் வாக்களிக்க உழைத்து எனது அனைத்து தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இந்த தேர்தலில்  நான் பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது எனது வெற்றி வாய்ப்பை பறிப்பதற்காக எனக்கு எதிராக பல சூழ்சிகள் செய்யப்பட்டது. இந்த எதிர்ப்பு கட்சிக்கு வெளியில் இருந்து வந்த எதிர்ப்புக்களை விட தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே எனக்கு கூடுதலான எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பின் போராட்டத்தின் மத்தியிலே போராடித்தான் வெற்றி பெற்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக செயற்பட்டுவருகின்றது.  வடக்கு கிழக்கிலே கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள 10 ஆசனங்கள் வன்னியில் இரண்டும் மட்டக்களப்பில் ஒன்றுமாக 3 ஆசனங்களை ஒரே ஒரு கட்சியான ரெலோ பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மக்கள் ஒரு வித்தியாசமான பாதையை விரும்புகின்றனர். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாற்றம் வேண்டும். மக்கள் அபிவிருத்தியை விரும்புகின்றனர்.  இந்த நிலையில் எமது கட்சி தலைமைப் பீடம் கட்சியின் அரசியல் எதிர்காலம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் சம்மந்தமாகவும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கூடி தீர்மானத்தை எடுத்து அந்த தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்பித்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில் இருக்கின்றோம்.

தமிழ் மக்கள்  கடந்த காலம் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சனைக்கான ஒரு தீர்வை வேண்டி நிற்கும் இந்த நேரத்திலே வித்தியாசமான முறையிலே தமிழ் மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு சிறந்த முடிவை எடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது. கட்சிக்காகவா மக்கள் மக்களுக்காகவா கட்சி என்ற ரீதியிலே மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

என்னை நம்பி வாக்களித்துள்ள இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் உள்ளூர் அபிவிருத்தியையும் தமிழ் தேசிய பாதையை சீரமைப்பதற்கும் எனது பதவிக்காலத்தை பயன்படுத்துவேன். 1994 ம் ஆண்டு மாவை சேனாதிராஜ யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறையில் போட்டியிட்டதன் காரணத்தால் வாக்குகள் இரண்டாக பிரிவடைந்து தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது அதே மாதிரியான நிலமை  இந்த முறை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள ஒரு தேசிய பட்டியலை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்க நாங்கள் ஆலோசனை வழங்கவுள்ளோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பலவகையில் பாதிக்கப்பட்டவர்கள்  வடக்கு கிழக்கிலே ஆயுதரீதியாகவும்  இனரீதியாகவும் பல்வேறுபட்ட முறையிலே அம்பாறை மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் பல தமிழ் கிராமங்கள் இன்று இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது அந்த நிலமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடுதலான அக்கறை செலுத்தவேண்டும் 
என்னை பொறுத்த மட்டிலே அவர்கள் மனதிலே குடியிருப்பவன் அதே மாதிரி அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எனது மனதில் குடியிருக்கின்றனர். எனவே எனது சேவையின் ஒருபகுதி அவர்களுக்குச் செய்வேன். 

கடந்த தேர்தலை விட இந்தமுறை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 ஆயிரம் வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக அலசி ஆராய வேண்டும். 
தமிழ் மக்கள் உரிமை மாத்திரமல்ல அபிவிருத்தியும் வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள் அந்த இடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்கள் விருப்பத்தில் அக்கறை செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட செயற்பாட்டினை மக்கள் விரும்பாததன் வெளிப்பாடே ஸ்ரீ லங்கா பெரமுன, மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது என்றார்.