அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றிய சேவையினை வழங்க வேண்டும் ;இன்பராசா

116802531 2745242439086448 923742578137721813 n
116802531 2745242439086448 923742578137721813 n

அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றிய சேவையினை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.

புதிதாகப் பதவியேற்ற பிரதமரை வாழ்த்தும் முகமாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்று நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றிய சேவையினை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நாட்டின் சகல வளங்களும் சகல மக்களுக்கும் பயன்படும் வகையில் சமமான முறையில் அனைத்துப் பிரதேசங்களுக்குமான அபிவிருத்தி செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் குறிப்பாக யுத்ததால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் போன்ற விடயங்களுக்கும் முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும் எமது கட்சியின் சார்பில் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்

இந்த நாடு பல்லின மக்கள் வாழும் நாடு. இந்த நாட்டை சமத்துவமாக எவ்வித பிரச்சினைகளும் இல்லா வண்ணம் ஆட்சி புரிய வேண்டும். அத்துடன் மிக முக்கிய பிரச்சினையாகவுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்திலும் பிரதமர் அக்கறை கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த ஆட்சியின் மூலம் புதிய பிரதமரால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்களுக்கு பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் அந்த வகையில் சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் தொடர்பிலான விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த நாட்டினை அனைத்து மக்களும் நேசிக்கும் ஒரு நாடாகக் கட்டியெழுப்ப முடியும். என்று தெரிவித்தார்.