மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றது:செல்வம் அடைக்கலநாதன்

IMG 1272 1
IMG 1272 1

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக வேகமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்த தேர்தல் எமக்கு உணர்த்தியுள்ளது  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

வவுனியா கற்குழி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,மக்களின் விடுதலை என்று பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து நாடாளுமன்றத்தில் ஒரு குழுவாக செயற்படும் முயற்சியை விரைவில் எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்திலும் ஒரு விசித்திரம் நடந்திருக்கின்றது. அங்கயன் இராமநாதன் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்கின்றார். தேசியத்தலைவருடைய இடத்தில் தான் எனக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இங்கு தேசியத்தின் நிலையை பாருங்கள். 
எனினும் வன்னியை குறைசொல்ல முடியாது. வன்னி தனது கடமையை செய்திருக்கின்றது. ஒரு ஆசனம் குறைந்திருந்தாலும் தேசியத்தையும் மக்களின் சிந்தனையையும் அது சுட்டிகாட்டியிருக்கின்றது. எனினும் இரண்டு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். எங்களுடைய வாக்குகளால் அது கவலைக்குரிய விடயமே.

இந்த தேர்தலில் எமது இருப்பை கேள்விகுறியாக்கியவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கின்றார்கள். தமிழர்கள் பூர்விகமானவர்கள் இல்லை என்று சொல்லும் அவர்கள். அந்த சிந்தனையை எப்படியும் நிலைநாட்டுவார்கள்.
எமது மக்களின் வாக்களிப்பை பார்க்கும் போது தேசியத்தை விட அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை பார்க்க முடிகின்றது.

போரினால் பாதிக்கபட்ட மக்கள் அதனை எதிர்பார்பது தவறில்லை.ஒரு குடும்பம் எனக்கு அனைத்து வசதியும் கிடைத்திருப்பதாக கருதுகின்றபோது தான் அந்த இயலாமையை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.எனவே இந்த சூழலை வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி கையாளப்போகின்றோம் என்பது மிகவும் சவாலான விடயம்.
ஏனெனில் பெரும்பான்மை பெற்றுள்ள அரசாங்கம் அபிவிருத்தியையும் முன்னெடுத்து அதனுடன் இணைந்து தேசியத்தின் தன்மையை உடைக்கின்ற செயற்பாட்டையும் மேற்கொள்ளும் இவை எமக்கு சவாலாக இருக்க போகின்றது. எனவே நாங்கள் தூங்க முடியாது.எமது மண்ணை காக்கின்ற பொறுப்பு எம் தலை மேலே சுமத்தப்பட்டிருக்கின்றது.

எங்களை பொறுத்தவரை காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விடயங்கள் முக்கியமானது. அது எமக்கு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படும். அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்படும்.
தேர்தலின்போது கூட்டமைப்பிற்குள்ளேயும் பல பிரச்சினைகள் இருந்தது. வெளியில் இருந்தும் பலர் விமர்சித்தார்கள். எங்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டோம். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிங்கள கட்சிகள் தமது காரியத்தை செயற்படுத்தியுள்ளார்கள். எனவே மக்களின் விடுதலை என்று பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து நாடாளுமன்றத்தில் ஒரு குழுவாக செயற்படும் முயற்சியை நாம் எடுக்கவுள்ளோம். அதிலே வரக்கூடியவர்கள் வரலாம். அதற்கான பேச்சுக்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றது. மக்கள் எமக்கு நல்ல பாடத்தை தந்திருக்கின்றார்கள்.அதனை இனியும் உணரவில்லையாயின் கூட்டமைப்பை கடவுளாலும் காப்பாற்றமுடியாது. எனவே மக்களுக்கான முழுநேர பணியாளர்களாக நாம் இருப்போம். எதை செய்யவேண்டும் என்று எமக்கு நீங்கள் கட்டளையிடுங்கள் என்றார்.