சிங்கராஜ வனப்பகுதியில் யோஷிதவுக்கு ஹோட்டல் பொய்யான குற்றச்சாட்டு என மறுப்பு

unnamed 1 8
unnamed 1 8

சிங்கராஜ வனப்பகுதியில் தனக்கு ஒரு ஹோட்டல் இருக்கின்றது என ஒரு சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளார் யோஷித ராஜபக்‌ஷ.

இது தொடர்பில் ஒரு சிலரால் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பில், அதனை வெளியிட்ட நபர்களுக்கு எதிராக தனது சட்டத்தரணி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், கடற்படை அதிகாரியுமான லெப்டினன்ட் கொமாண்டர் யோஷித ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு தொடர்பான அமைப்பின், சுற்றாடல் மற்றும் சட்ட அதிகாரியான சஞ்சீவ சமிக்கரவினால் தெரிவிக்கப்பட்டது என வெளியிடப்பட்டுள்ள குறித்த கருத்துக்கு எதிராகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த கருத்தை வெளியிட்ட நபருக்கு எதிராக தனது சட்டத்தரணி மூலம் அனுப்பப்பட்ட அவதூறுக் கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அக்கடிதத்தில், குறித்த நபரை பகிரங்கமாக மன்னிப்புக் கோருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சஞ்சீவ சமிக்கர பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அண்மையில், லங்காகம மற்றும் அதனை அண்டி வாழும் மக்களுக்கு போக்குவரத்து வசதி செய்வதாக தெரிவித்து, சிங்கராஜ வனப் பகுதியில், பாரிய சட்ட விதிமீறல் நடவடிக்கையாக காடழிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்புலத்தில் பாரிய முதலீட்டு நடவடிக்கைகள் காணப்படுவதோடு, யோஷித ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான ஹோட்டலொன்றும் அங்கு காணப்படுவதை நாம் அறிவோம்” என்றுள்ளது.