எட்டு நாட்களில் சீனா நிர்மாணித்த சிறப்பு மருத்துவமனை திறப்பு!

0

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் சீனாவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், அங்கு நிர்மாணிக்கப்பட்டுவந்த சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறப்பு மருத்துவமனை, எட்டு நாட்களில் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக, விஷேட வசதிகளை கொண்ட சிறப்பு மருத்துவமனையை உருவாக்கப் போவதாக கடந்த ஜனவரி 23ஆம் திகதி சீனா அறிவித்தது.

இதற்கமைய நேற்றுடன் சிறப்பு மருத்துவமனை கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்தது. ஆகவே இன்று முதல் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய தற்போது வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விதமாக 1,400 மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், முதலாவது சிறப்பு மருத்துவமனையில் இருந்து 25 மைல் தொலைவில் லீய்சின்ஷான் பகுதியில் மற்றொரு சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்தும் பணியை சீனா அரசு மேற்கொண்டு வருகிறது.

உயிர்களை காவுக்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 360பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 17 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 478 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.