பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது

AP20161699306997 720x380 1
AP20161699306997 720x380 1

அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்களின் படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 70ஆயிரத்து 869பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 554பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேஸிலில் கொவிட்-19 தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை 25இலட்சத்து 55ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 90ஆயிரத்து 188பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 77ஆயிரத்து 911பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 18ஆயிரத்து 852பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 17இலட்சத்து 87ஆயிரத்து 419பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில், விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரேஸில் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அரச இதழில் அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. அதில், தரைமார்க்கம் அல்லது கடல் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான தடைகள் மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேஸில் வந்து 90 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டு பார்வையாளர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்னர் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.