கலாச்சாரத்தைக் காப்பாற்ற மனிதத்தை இழக்கக் கூடாது: சாய் பல்லவி!

64098
64098

நாம் நமது மனிதத்தை இழந்து கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது எந்த விதத்திலும் பலனளிக்காது என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பாவக் கதைகள்’ என்கிற ஆந்தாலஜி திரைப்படம் வெளியாகிறது. கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் என நான்கு இயக்குநர்கள் இதில் நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளனர்.

ஆணவக் கொலைகளை வைத்தே இந்தக் குறும்படத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிமாறன் ‘ஓர் இரவு’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். காதலித்து, திருமணம் செய்ய வீட்டை வீட்டுச் சென்ற பெண்ணை மீண்டும் சந்திக்கும் தந்தை, மகளுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் என்பதே இந்தக் கதையின் சுருக்கம்.

இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பா கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி மகள் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சுமதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முடித்த பிறகு எப்படி இருந்தது என்று சமீபத்தில் ‘தி இந்து’ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் சாய் பல்லவி கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் சாய் பல்லவி கூறியிருப்பதாவது:

“நான் அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முயன்று கொண்டிருக்கிறேன். நான் ஒரு மருத்துவர். திரைத்துறையில் எது எப்படி என்று எனக்குத் தெரியாது. துறைக்குள் நான் நுழையும்போது நான் நடித்த எல்லா கதாபாத்திரத்துக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு எதிர்வினை இருந்தது. எனவே இந்த சுமதி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகக் கடினமாக இருந்தது. அதுவும் எனது நண்பர்களில் சிலர் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் அதில் நடித்தது இன்னும் கடினமாக இருந்தது. கர்ப்பமான பெண் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு எனக்கும் தாய்மை உணர்வுகள் வர ஆரம்பித்தன.

இது இப்படியிருக்க, படத்தின் கதையைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், நாம் கவுரவக் கொலைகள் பற்றிப் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறோம். ஒரு சமூகமாக நாம் அதற்காக எதுவும் செய்யவில்லை. நமது இனத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் நீ மணக்க வேண்டும் என்று சொல்லியே நான் வளர்க்கப்பட்டேன். இது அடிப்படையில் எல்லா இடங்களிலும் இருக்கும் விஷயம்தான். கலாச்சாரம் என்கிற காரணத்தை வைத்து இதைச் சொன்னாலும் நாம் மனிதத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும். கலாச்சாரத்தைக் காப்பாற்ற மனிதத்தை இழக்கக் கூடாது. அது பலனளிக்காது.

இப்படியான சம்பவங்கள் பார்த்துப் பரிதாபப்படுவது மட்டுமே போதாது. இந்தக் குறும்படத்தைப் பார்த்த பிறகுதான் இந்தப் படம் திரையரங்கிலோ, குறைந்தது தொலைக்காட்சியிலோ ஓடினால் இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன். சில நேரங்கள் யதார்த்தத்தைத் திரையில் பார்க்கும்போது அது உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சாய் பல்லவி மேலும் தெரிவித்துள்ளார் ”.