வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் நயன்தாரா!

nayantara 1
nayantara 1

தற்போதெல்லாம் வரலாற்று நாயகர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று கதைகளை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதோடு இந்த படங்கள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்திய திரையுலகையே மிரளவைத்த படம் தான் பாகுபலி. இதன் இரண்டு பாகமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாக பெரும் சாதனை புரிந்தது.

இதனைத்தொடர்ந்து பல இயக்குனர்கள் வரலாற்றுக் கதைகளை மையமாக கொண்டு படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்தமிழக வீரமங்கையின் பயோபிக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதாவது இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்காக போராடிய வீரமங்கை தான் ராணி வேலு நாச்சியார். இவர் பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில் ராணியாக இருந்ததோடு, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய பெண் விடுதலைப் போராட்ட தலைவியும் ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீரர் என்ற பெருமைக்குரிய வரும் இவரே.

மேலும் இந்திய அரசு வேலுநாச்சியாரை கவுரவிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பொருட்களை சிவகங்கை அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாப்பதோடு, ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலையையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முதல் பெண் போராட்ட வீரராக இருந்து நாட்டிற்கு பெரும் சேவை செய்த ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு, படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது அந்தப் படத்தில் நாச்சியாராக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இதுவரை இது பற்றிய எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.