கொரோனா காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் ரஹ்மான் பாடல்!

1624757168 rahman 2 1
1624757168 rahman 2 1

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகப் பிரபல பாடகர்கள் பங்கேற்ற பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

கொரோனாவின் 2-வது அலையால் மீண்டும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஹிந்திப் பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

பிரபல பாடகர்களான அல்கா யாக்னிக், ஷ்ரேயா கோஷல், சித்ரா, சாதனா சர்க்கம், ஷாஷா திருபதி, அர்மான் மாலிக், அசீஸ் கெளர் ஆகியோரின் பங்களிப்பில் குல்ஸாரின் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மேரி புக்கார் சுனோ (மேரி புகார் ஷுனோ) என்கிற பாடல் உருவாகியுள்ளது. பூமித்தாய், தனது குழந்தைகளுக்கு கொரோனா காலகட்டத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளன.

கொரோனா காலகட்டம் அனைவருடைய வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாதாரண சூழலும் வலியும் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து மீண்டு வருகிறோம். வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நானும் குல்ஸாரும் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளோம். பலவிதமான கடினமான காலகட்டங்களைக் கடந்து வந்துள்ளோம். இதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வோம் என பூமித்தாய் தன் குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டுவதுதான் இப்பாடல் என ரஹ்மான் கூறியுள்ளார்.

சோனி மியூசிக் இந்தியாவின் யூடியூப் தளத்தில் இப்பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.