எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்?

d
d

ஜகமே தந்திரம் என்ற தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படத்தை சற்று முன்னர்தான் பார்த்து முடித்தேன், படம் பார்ப்பதற்கு முன்னதாகவே ஈழத்தமிழர்களைப் பற்றிய ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்கான ஒரு திரைப்படத்தை தான் எடுத்துக் கொண்டதில் பெருமைப்படுவதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் படம் என்னவோ ஈழத்தமிழர்களை கையாலாகாதவர்களாக காட்டும் சித்தரிப்பு இடம்பெற்றிருக்கிறது,

ஒரு நாட்டுக்கான அத்தனை கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி முப்படைகளையும் கொண்டு சாதித்துக் காட்டி துரோகத்தால் விழுந்த ஒரு இனத்தை, புலம்பெயர் நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிதியில், பலர் கண்களில் மண்ணை தூவி கடல்வழியாக ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்த்த வல்லமையுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை, அந்த நாட்டுக்கு அகதியாக வருபவர்களை அரவணைத்துஅவர்களுக்கான சட்ட உதவிகளை செய்து வந்த ஒரு குழுவை கையாலாகாதவர்கள் என்றும் மதுரையில் பிறந்து வந்த ஒருவர் லண்டனுக்கு வந்து, வியூகம் அமைத்து இனவாத வெள்ளையர்களுடன் சேர்ந்து அக்குழுவின் தலைவரை உட்பட பலரை கொன்று குவித்து பின்னர் தன் தவறை உணர்ந்து தானே அந்த இனவாத வெள்ளையர் குழுவை அளிப்பது அல்லது இல்லாதொழிப்பது என்பதனை நிறைவேற்றியுள்ளார்.

படம் போன போக்கில் ஏதோ தனுஷ் வந்து ஈழத்திலும் தனி நாட்டை பெற்றுக் கொடுத்து விடுவாரோ என்பது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது (நகைச்சுவை) .ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இன்றைய நிலையில் உங்கள் இந்திய தமிழ் சினிமாவை தாங்கி தூக்கி நிறுத்தி நிற்பவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் மறந்துவிடாதீர்கள் ( LYCA)
எனக்கு எழுந்த பல கேள்விகள்புலம்பெயர்ந்த நாடுகளில் இனவாத வெள்ளையர்கள்தான் எங்கள் முதல் எதிரிகளா?

லண்டன் தெரு வீதிகள் சட்ட ஒழுங்கு அற்ற ஆபிரிக்க நாடுகள் போன்றவையா? எங்கேயும் எப்பொழுதும் ஆயுதங்களுடன் ரவுடிக் கும்பல்கள் திரியக்கூடிய இடமா?

காதலிப்பது போன்று நடித்து பழி வாங்கும் குணம் உடையவர்களா ஈழத்து தமிழ் பெண்கள்?

ஈழத்தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்றும் மதுரையிலிருந்து வந்த ஒரு தனி மனிதன் அவர்களின் நீண்ட கால சாம்ராஜ்ஜியத்தை அழித்து பின்னர் தன் தவறை உணர்ந்து அவர்களின் இலக்கை நிறைவேற்றி கொடுத்தார் என்பது நடக்கக் கூடியதா? சாத்தியமானதா ?நடந்திருக்கிறதா?

நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சொல்வதற்காக படம் எடுக்க முயல்கிறீர்களா அல்லது அதை சொல்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் உங்கள் வியாபார இலக்கை அடைய முயல்கிறீர்களா?

படத்தின் நாயகனே தனது சொந்த ஊரில் வந்தேறிகள் ஆக உள்ளவர்களை எதிர்ப்பதாக காட்டிவிட்டு வெள்ளை இனத்தவரின் நாடுகளில் மட்டும் அவர்களிடம் இவ்வாறான ஒரு பண்பு இருக்கக்கூடிய நியாயத்தை ஏன் கூற மறந்து விட்டீர்கள் ( தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உள்ள ஈழதமிழ் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்)

அருள் பொன்னையா