மன்னார் நானாட்டான் பகுதியில் மீட்கப்பட்ட நாணயக்குற்றிகளின் சிறப்பம்சங்கள்!

120283894 3406416209441908 3776013726564814815 n
120283894 3406416209441908 3776013726564814815 n

கடந்த வாரம், மன்னார், நானாட்டான் பகுதியில் வீடொன்றை அமைப்பதற்குத் தோண்டப்பட்ட அத்திவாரத்திலிருந்து பெருந்தொகையான நாணயக்குற்றிகள் மீட்கப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. தமிழ் ஊடகங்கள் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறித்த நாணயம் எனவும், சிங்கள – ஆங்கில ஊடகங்கள் அனுராதபுரகாலத்துக்குரிய நாணயங்கள் எனவும் போட்டியிட்டு செய்தி எழுதியிருந்தன.

இரண்டு ஊடகத் தரப்பிலும் துறைசார்ந்த அறிவுடைய செய்தியாளர்கள் இல்லாமை, அந்தச் செய்தி தொடர்பான புகைப்படங்களிலேயே வெளிப்பட்டு நிற்க, பரபரப்புத்தரும் செய்தியாக அது மாறியிருந்தது.அது ஒருபுறமிருக்கட்டும். நாணயம் ஒன்றை வெளியிடும் தரப்பு என்னவென்ன சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதை மட்டும் இப்பதிவில் பார்க்கலாம்.குறிப்பிட்டளவு சனத்தொகை கொண்ட மக்கள் கூட்டத்தை ஆளுகை செய்யும் அரசொன்றினாலேயே நாணயம் வெளியிட முடியும்.

பேரரசனையோ, அரசனையோ, குறுநிலத் தலைவனையோ தலைமை அதிபதியாகக் கொண்டியங்கிய ராச்சியங்கள்- அரசிருக்கைகள் தமது புழக்கத்திற்கான நாணயங்களை வெளியிட்டிருக்கின்றன. இந்நாணயங்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆட்சி அதிகார நிலப்பரப்புக்குள் செல்லுபடியாகும். அதேவேளை வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆக, சமூகமொன்று தமக்கான நாணயத்தை வெளியிட வேண்டுமாயின் கல்வியாலும், வர்த்தகத்தினாலும் வளர்ச்சிகண்ட அரசொன்றை கொண்டிருக்கவேண்டியது அவசியமாகிறது.

ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பொன்றைக் கொண்டிருத்தல் அவசியமாகிறது.அந்த அரசு பொதுவான இலச்சினை ஒன்றின் கீழ் ஆளப்படுகின்றமையையும் நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு மீன் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஓரிடத்தில் அதிகளவில் கிடைக்கப்பெறுகின்றதாயின், அந்தச் சின்னத்தைத் தம் குலச் சின்னமாகவோ, அரச இலச்சினையாகவோ கொண்டியங்கும் சமூகமொன்று அதன் அதிகாரநிலைப்பட்ட அந்தப் பகுதிக்குள் இயங்கியிருக்கவேண்டும். ஆளுகைசெய்திருக்க வேண்டும்.

அதேபோல அந்த நாணயத்திற்கான பெறுமதியையும், அதனைக்கொண்டு கொடுக்கல் – வாங்கல் செய்யக்கூடிய அளவீட்டுப் பெறுமானத்தையும், நன்கு கணிப்பிடக்கூடிய கணக்கீட்டு சூத்திரம் ஒன்றும் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். இந்தப் பண்புகள் நன்கு விருத்திபெற்ற – நாகரிகமடைந்த சமூகங்களிலேயே சாத்தியப்படும் என்பதை நாம் உணர்வோம்.நாணயங்கள் பொதுவான ஓர் உலோகத்தினால் ஆக்கப்படுபவை.

அவற்றுக்கென்று தனித்தன்மைகளும், அவற்றுள் இருக்கும் சின்னங்களின் தனித்துவங்களும் படைக்கப்படுபவர்களால் கடைபிடிக்கப்படும். இவற்றை அச்சுப் பிசகாமல் ஆக்குவதற்குத் தொழிற்கூடங்கள் அவசியப்படுகின்றன.

எனவே தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்த சமூகத்தினாலேயே இவ்வகையான நாணயங்களைப் பெருமளவில் உற்பத்திசெய்ய முடிகிறது. நாணயத்தை ஆக்குவதற்கான தாதுப்பொருளும், அதனை வடிவமைப்பதற்கான கலைத்துவமும் அறிந்த அறிஞர்கள் வாழும் சூழலும் கவனிக்கத்தக்க அம்சங்களாகின்றன.நாணயப் புழக்கமானது ஒரு நாட்டின் பிரசைகள் அனைவருக்குமானது.

அரசரும், அவரது அவைப் பரிவாரங்களும் மட்டும் நாணயத்தை வைத்துக்கொள்ளமுடியாது. எனவே அனைவரும் உழைத்துப் பொருளீட்டவும் – இலாபமடையவும் கூடிய சமூகச் சூழலிலேயே நாணயங்கள் புழக்கத்துக்கு வருகின்றன. பொருளாதார ரீதியில் சமூக அடுக்கமைவு நிர்ணயிக்கப்படும் பண்பாட்டையும் இந்த நாணயங்கள் வெளிப்படுத்துகின்றன. “இருப்பவன் – இல்லாதவன்” வாழ்வொழுங்கின் தொடக்கமும் இந்த நாணயங்கள் தான்.

எனவே மன்னார் மாவட்டத்துக்குள் வருகின்ற நானாட்டான் என்கிற கிராமமானது இத்தனைப் பண்புகளையும் கொண்ட அரசிருக்கையொன்றைக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? அதனை ஏன் கண்டுகொள்ளத் தவறினோம்?

ஜெரா தம்பி