அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழ்நாடுஅரசு

tamilnadu
tamilnadu

அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நாட்கள் அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. மேலும் குறைந்த ஊழியர்களுடனே பல மாவட்டங்களில் அரச அலுவலங்கள் இயங்கி வந்தன.

இதனால் அரச அலுவலங்களில் கோப்புகளுக்கான பணிகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாரத்தின் ஆறு நாட்களும் அரச அலுவலகங்களுக்கு வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்ட உத்தரவின்படி, கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால், ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் காலை 10.30 மணிக்குள் அரச பணியாளர்கள் அலுவலங்களுக்குள் சமூகமளிக்க வேண்டும் என்றும் அரச பணியாளர்கள் தினமும் வருவதை அறிக்கை தயார் செய்து பணியாளர் சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கொரோனா காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரச அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.