ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா? – அமைச்சர் விளக்கம்

curfew colombo
curfew colombo

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும் என்பதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் மூலம் சமூகத் தொற்று பரவ வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை அரசாங்கம்  தளர்த்தவில்லை என்றும் கடந்த மூன்று மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும், சுகாதர அறிவுறுத்தல்கள்  முறையாக பின்பற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அதற்கான தேவை தற்போது இல்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை எதிர்கொள்ள சுகாதார  தரப்பினரும், பாதுகாப்பு தரப்பினரும் தயாராகவே உள்ளார்கள் என குறிப்பிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்கம் முறையாக தொற்றை கட்டுப்படுத்தும் என்பதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் கூறினார்.