தமிழ் தலைமைகள் பேசத் தயங்கியதை பேசி இனத்தின் தலைவராகியவர் ஆயர்!

vakeesam History of Today May 02 copy
vakeesam History of Today May 02 copy

உலகில் மதம் கடந்து நேசிக்கப்பட்டவர்கள் சிலர்தான். அன்னை திரேசா என்றதும் எமக்கு அவரின் மனிதாபிமான முகம்தான் நினைவுக்கு வருகிறது. உலகில் பல மதங்கள் காணப்பட்ட போதும் மதத்தின் தத்துவங்களை வாழ்வில் பிரதிபலித்து வாழ்ந்த வெகு சிலர்தான் இந்த உலகில் போற்றப்படுகின்றனர். அப்படி ஒரு உன்னதமான சமயத்துறவிதான் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு. தமிழ் மக்களின் மனங்களில் ஆயர் என இடம்பிடித்த ஒற்றை புனிதர் இவர் எனலாம். தன் சமய மக்களுக்கு மாத்திரமின்றி சபிக்கப்பட்ட ஒரு இனத்திற்கே தலைவராகியவர்.

மன்னார் ஆயர் மதிப்பிற்குரிய இராயப்பு ஜேசேப்பு அவர்கள், ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவில் சித்திரை 16, 1940இல் பிறந்தார். நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், முருங்கன் மகா வித்தியாலயம், யாழ் புனித பாத்திரியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைப் பெற்ற இவர், கண்டி தேசிய குருமடம், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி புனித பவுல் குருமடம் முதலியவற்றில் குருத்துவக் கல்வியைப் பெற்று, டிசம்பர் 12, 1967இல் யாழ் மரியன்னை தேவாலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1992ஆம் ஆண்டு முன்னாள் பாப்பரசர், இரண்டாம் சின்னப்பரால் மன்னார் மாவட்ட ஆயராக நியமனம் பெற்றதுடன், அதே ஆண்டு மன்னார் மடு தேவாலயத்தின் ஆயராகவும் திருப்பொலிவு பெற்றார். இராயப்பு ஜோசேப்பு அவர்களின் பணி என்பது போர்க்காலத்திலும் போர் நிலத்திலுமாகக் காணப்பட்டது. பைபிளில் சித்திரிக்கப்பட்ட கொடும் நகரங்களில் இவர் தன் பணியை தொடர்ந்தார். மனிதாபிமானம் தேவைப்படுகின்ற, உயிர்ப்பலி கடுமையாக எடுக்கப்பட்ட ஈழ மண்ணில் இவர் ஆற்றிய பணி என்பது உலகில் இவரை தனித்துவமான ஆயராக பெயரிட்டது.

மன்னார் மாவட்டமானது எப்போதும் இன அழிப்புப் போருக்கும் நில ஆக்கிரமிப்புக்களுக்கும் முகம் கொடுக்கும் மாவட்டம் ஆகும். ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த பல இன ஒடுக்குமுறை அவலங்கள் மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அப்படி நிகழ்கின்ற போதெல்லாம் ஆயர், ஒடுக்கப்பட்ட மக்களின் துணைநின்று அவர்களுக்காக உரத்து குரல் கொடுத்தார். சுனாமிப் பேரவலம் ஆகட்டும், இலங்கை அரசின் யுத்தம் ஆகட்டும், மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதிலும் உதவிகளை புரிந்து அவர்களின் வாழ்வை மீளமைப்பதிலும் ஆயரின் பணி மகத்துவமானது.

மன்னார் மடு தேவாலயத்தில் 1999இல் ஸ்ரீலங்கா அரசு நிகழ்த்திய பொதுமக்கள் படுகொலையின் போதும், 2008இல் போரில் தஞ்சமடைந்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பின் போதும் ஆயர் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த கதியை உலகிற்கு எடுத்துரைத்தார். அத்துடன் 2007இல் இலுப்பக்கடவையில் இலங்கை அரசின் விமானத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லபட்டவர்களை கடற்புலிகள் என்று இலங்கை அரசு சொன்னபோது அதனை மறுத்து அவர்கள் பொதுமக்கள் என்பதை இந்த உலகிற்கு தெரியப்படுத்தினார் ஆயர்.

2009இல் ஈழத் தமிழ் மக்கள் மிகப் பெரிய இனப்படுகொலையை சந்தித்தனர். அதன் பின்னர், ஸ்ரீலங்கா அரசின் சட்டதிட்டங்கள் யாவும் உண்மை நிலவரங்களை மறைக்கும் விதமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக கடுமையாக இறுக்கப்பட்டது. ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பில் தமிழ் தலைமைகள்கூட தெளிவற்ற நிலைப்பாடுடன் இருந்தனர். இலங்கை அரசை நோக்கியும் சர்வதேசத்தை நோக்கியும் சரியான தகவல்களை முன் வைக்க முடியாத நிலையில் தமிழ் தலைமைகள் தடுமாறின.

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தோன்றிய மன்னார் மறைமாவட்ட ஆயர் இராசப்பு ஜோசேப்பு அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் போரில் அழிக்கப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றுடன் தமிழர்களுக்கு முன் வைக்க வேண்டிய தீர்வு தொடர்பிலும் கூறிய கருத்துக்கள் சர்வதேச மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இலங்கை அரசை ஆட்டம் காணச் செய்தது. இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான வலுத்த சாட்சியமாகவும் அவரது வாக்குமூலம் அமைந்தது.

அத்துடன் மிக முக்கியமான புள்ளி விபரம் ஒன்றையும் ஆயர் முன்னிலைப்படுத்தினார். போருக்கு முன்னர் இருந்த வன்னி மக்கள் தொகையிலிருந்து போருக்குப் பிந்தைய வன்னி மக்கள் தொகையில் 146,679பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அரச ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஆயர் எழுப்பிய கேள்வி இனப்படுகொலை தொடர்பான விசாரணைக்கும் நீதிக்கும் முன்வைக்கப்பட்ட அடிப்படையான சாட்சியமாகும்.

விடுதலைப் புலி என்றும் பிரபாகரன் என்றும் தென்னிலங்கை இனவாத ஊடகங்கள்  சித்திரித்த தருணங்களில் எல்லாம் மிகுந்த அரசியல் தெளிவோடும், தென்னிலங்கை மக்களும் புரிந்து கொள்ளுகின்ற வகையிலும் தமிழர் நியாயத்தையும் தமிழர் போராட்டத்தின் தன்மையையும் எடுத்துரைத்தார் ஆயர். நேர்மையும் அறமும் கொண்ட தன் சீரிய கருத்துக்களாலும் புனிதமான வாழ்வினாலும் மக்கள் பற்றினாலும் அவர் ஆற்றிய பணி என்பது காலம் கடந்து ஈழத் தமிழருக்கு நன்மை பயக்கும் என்பது அழுத்தமாக உரைக்க வேண்டியதாகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கண்ட ஆயர் இராசப்பு ஜோசேப்பு அவர்கள், தனது மூப்பின் காரணமாக தனது 75 ஆவது வயதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் நோய்வாய்ப்பட்ட நிகழ்வுகளும் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் சோகத்தை அளித்தது. தற்போது தன்னுடைய 80ஆவது வயதில் ஆயர் இராசப்பு ஜேசேப்பு அவர்கள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

தமிழ் மக்களின் தலைமைகள் எனப்படுவோர், தம் பதவிகளுக்கும் சுயநலன்களுக்குமாக இனத்தின் உரிமையையும் நீதியையும் பலியிடுகின்ற காலத்தில், தன் துறவு வாழ்வில், தன் சமய மக்களுக்காக மாத்திரம் வாழாமல், தான் வாழ்ந்த தேசத்தின் மக்களுக்காக பல அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளை கடந்து வாழ்ந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு, ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருப்பார். ஆயர் என்றாலே இராயப்பு ஜோசேப்பு என்ற பெயரும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்பட்டிருக்கும்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்.