டக்ளஸ் கட்சியின் புலிக்காதல்!

epdpfake2
epdpfake2

தேர்தல் வந்தால் நம் கட்சிகளுக்கு – அரசியல்வாதிகளுக்கு “புலிக் காதல்” வந்து விடுவது இயல்பு. பொதுவாகத் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பிடித்துள்ள கட்சிகளே இதில் போட்டி போடுவது வழமை. இந்த வரிசையில் ஈ. பி. டி. பியும் சேர்ந்திருப்பதுதான் வேடிக்கை.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஈ. பி. டி. பி. யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சிறீதாரணி நிக்சன் என்பவரைக் களமிறக்கியுள்ளது. “செஞ்சோலை வளர்த்த சமூக சேவகி”, என்ற கோஷத்துடன் பிரசாரத்தை ஆரம்பித்தனர் ஈ. பி. டி.பி. கட்சியினர்.

அமர்க்களமாகப் பிரசாரத்தை தொடங்கியவர்களுக்கு சமூகவலைதளத்தில் ஆரம்பமே அடியாகி விட்டது. ஏனெனில், சிறீதாரணி உண்மையில் செஞ்சோலையில் வளர்ந்த பெண் கிடையாது. புலிகள் ஆதரவு மற்றும் கழிவிரக்க வாக்குகளைப் பெறவே அவர்கள் இப்படி ஒரு திட்டமிட்ட பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

செஞ்சோலையில் வளர்ந்தவர்களும் – செஞ்சோலையில் வளர்ந்தவர்கள் பற்றி நன்கறிந்தவர்களும், சிறீதாரணியிடம் “நீ செஞ்சோலையில் வளரவில்லையே”, என்று கேட்டதுதான் தாமதம் முழித்த அவர், “நான் செஞ்சோலையில் வளரவில்லை செந்தளிரில்”, வளர்ந்தேன் என்று கூறியுள்ளார். இதேபோல, அவர்களின் கட்சியின் முகநூல் பதிவிலும் செஞ்சோலையை செந்தளிர் என்று திருத்தியும் வைத்தார்கள்.

ஆனால், ஈ. பி. டி. பியினர் அதற்குப் போட்ட திருத்தப் பதிவுதான் மிகப்பெரிய ஜோக், “செந்தளிர் சிறுவர் இல்லம் வளர்த்தெடுத்த சமூகசேவகி கிளிநொச்சி மண்ணின் மகள் நி. சிறீதாரணியை பாராளுமன்றம் அனுப்புவோம். (செந்தளிரில் குழந்தைகள் வளர்ந்தார்கள் செஞ்சோலையில் சிறுவர்கள் வளர்ந்தார்கள் குறிப்பு: முன்னர் தவறான புரிதலால் செஞ்சோலை எனக் குறிப்பிட்டு இருந்தோம் தவறுக்கு வருந்துகிறோம்”, என்று பதிவிடப்பட்டது.

புலிகள் நடத்திய இந்த அமைப்புப் பற்றி அடிப்படைகூட இல்லாமல் பதவிட்டிருப்புதுதான் வேடிக்கை. உண்மையில் செந்தளிர் என்பது சிறுவர் இல்லமே அல்ல. அது குழந்தைகள் பராமரிப்பு நிலையம் பணிக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கே விட்டுச் சென்று, பின்னர் வீடு திரும்பும்போது அழைத்துச் செல்வார்கள். தாய், தந்தையரை இழந்த, அல்லது இரு பெற்றோரில் ஒருவரை இழந்த – அல்லது போரால் கைவிடப்பட்ட சிறுகுழந்தைகளும் செஞ்சோலையிலேயே வளர்க்கப்பட்டார்கள். இது தெரியாமல் தான் வளர்ந்த இடம் குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறி வருகிறார்.

ஆனால், அவர் முரணாகக்கூறிய பதிலும்கூட (செந்தளிர்) முழுப் பொய் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள். 1991 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1998 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செந்தளிர் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் எப்படி வளர்ந்திருக்க முடியும் என்று கேள்வி எழுவதும் இயல்புதானே.

போர் உருவாக்கிய நமது சமூகத்தில் பெற்றோரின் பெயர்கள் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பெற்றர்களின் பெயர்களில் சந்தேகமிருப்பவர்கள் இல்லை. அதுபோல, தான் வளர்ந்த இடம் எதுவென்பதில் இவருக்குக் குழப்பம் – தடுமாற்றம் ஏற்படுவதில் உண்மை இருக்க முடியுமா?

இவர் பற்றிய விடயத்தை செஞ்சோலை மாணவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியையிடம் கேட்டபோது, “இந்தப் பெண் ஒரு போதும் அங்கு வளரவில்லை”, என்று உறுதியாகக் கூறினார்.

இது ஒருபுறமிருக்க, பொதுவெளியில் பலருக்கு இருக்கும் சந்தேகங்களையும் இதில் குறிப்பிடுவது பொருத்தம்.

செஞ்சோலையில் வளர்ந்த ஒருவர் “புலி எதிர்ப்பு” என்ற கோஷத்தை உயர்த்திப் பிடித்திருக்கும், ஒட்டுக்குழு என்று விமர்சிக்கப்பட்ட ஈ. பி. டி. பி. கட்சியில் வேட்பாளராவதற்கு முன்வருவாரா?

தாங்கள் யாரை “மாமா” என்றும் “தலைவர்” என்றும் அன்போடு அழைத்தார்களோ, அந்த வாயால் டக்ளஸ் தேவானந்தாவை “தலைவர்” என்று விளிப்பார்களா? அப்படி விளிக்கத்தான் அவர்களுக்கு மனம் வருமா…?

விடுதலைப் புலிகள் சாதாரணமாக செஞ்சோலையை கட்டமைத்து விடவில்லை. அதற்கான பதிவுகள் – சான்றுகளைக்கூட இறுதிவரை காத்தார்கள். ஏன் தாங்கள் மடிந்தபோதும்கூட அந்தப் பிள்ளைகள் வாழ வழி செய்தே சென்றிருக்கிறார்கள். அவர்களின் வளர்ப்பில் எவரும் தடம் புரண்டதில்லை.

நிலைமை இவ்வாறிருக்க ஈ.பி.டி.பி. கட்சியில் போட்டியிடுபவர் வெறுமனே பொய்களை பிரசாரமாக்கி – கழிவிரக்கத்தின் மூலமும் – புலிகளின் ஆதரவு வாக்கையும் கவர்ந்து விடத் துணிந்துள்ளார். இப்போதே இவ்வளவு தகிடுதத்தம் செய்யும் இவ் நாடாளுமன்றம் போனால் நிலைமை எப்படி? என்பது பலரின் சந்தேகம்

இந்தப் பிரசார தில்லுமுல்லுக்கள் பற்றிக் கூறிய ஒருவர், “இனியும் அவரிடம் செந்தளிரில் நீ வளரவில்லையே என்று கேட்டுவிடாதீர்கள். கேட்டால், காந்தரூபன் அறிவுச் சோலையில் (ஆண் சிறுவர்களுக்கான இல்லம்) வளர்ந்தேன் என்று கூறிவிடக்கூடும்”, என்றார்.

சரி, எப்போதும் புலிகளை அவர்களின் கொள்கைகளை எதிர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்த விடயம் தெரியாமல் போயிருக்குமா என்று தெரியவில்லை.
“நாலு வாக்கு வருகிறது என்றால் புலிகள் பெயரைப் பயன்படுத்துவதுகூட தப்பில்லை” என்று யாராவது அவருக்கு ஆலோசனை கூறியிருக்கக்கூடும்.

கட்சியை ஆரம்பித்த காலத்தில் வீணைச் சின்னத்துக்குப் பதிலாக தம்புரா வாத்தியத்த்தின் படத்தை காட்டி வாக்குக் கேட்டவர்கள், கிளிநொச்சியில் இருந்து யார் வேட்பாளரானாலும் அவர்களைக் காட்டி புலிகள் ஆதரவு வாக்கை பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்களோ என்னவோ, யார், கண்டார்?