தேர்தல் சமயத்தில், தமிழரசுக் கட்சிக்குள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானவர்களில் அதன் பொதுச் செயலாளர் கி. துரைராஜசிங்கமும் ஒருவர். அந்த சர்ச்சையின் விளைவுதான் அவரின் இப்போதைய ராஜிநாமா. அவரின் இந்த ராஜிநாமாவும் அண்மை நாட்களாக எதிர்பார்க்கப்பட்டதுதான்.
ஆனால், அவரின் ராஜிநாமாவுக்கு முன்னரே அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று காய்கள் நகர்த்தப்பட்டு விட்டன. இந்த காய் நகர்த்தலுக்குப் பின்னால் நீறுபூத்த நெருப்பாக இன்றும் தொடரும் சுமந்திரன் ஆதரவு அணி – சுமந்திரன் எதிரணிதான் காரணம். பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் சுமந்திரன் ஆதரவு அணியைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டு வலுவாகவே உண்டு. இதற்கு அவரின் கடந்த கால செயற்பாடுகளும் சான்று.
இப்போது, பொதுச் செயலாரை நியமிக்க வேண்டும் என்ற நிலையாகி விட்டது. யாரை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து இரு தரப்பினர் தற்போது காய் நகர்த்தியுள்ளனர்.
தேசியப் பட்டியல் விவகாரத்தில் அடிபட்ட வேங்கையாக கோபத்தில் இருக்கும் மாவை சேனாதிராசா தமக்கு சார்பானவருக்கே அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்று காய் நகர்த்தியுள்ளார். அந்தப் பதவி தனது நண்பரும் – கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானத்துக்கு கிட்டச் செய்வதற்கு வழியேற்படுத்தி வருகிறார். மும்மொழித் திறமை – விடயங்களை கையாள்வதில் கைதேர்ந்த சீ.வி.கேயை தவிர்ப்பது கடினம். ஆனால், எதிர் தரப்பு கிழக்கு பிரதேச வாதத்தை கையில் எடுத்து அவரைத் தவிர்த்து விட முனையக்கூடும். ஆனாலும், மாவை சேனாதிராசா பொதுச் செயலர் பதவியில் அவரை அமர்த்தவே பிரயத்தனப்படுகிறார்.
இது ஒருபுறமிருக்க, சுமந்திரன் தரப்பு இரா. சம்பந்தனின் செயலாளராக இருக்கும் குகதாஸனை களமிறக்கத் திட்டமிட்டு வருகின்றது. குகதாஸனின் நியமனத்தை கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட கட்சியின் முக்கிய புள்ளிகள் எதிர்க்க முடியாத நிலைமை. காரணம் தேர்தல் காலங்களில் பல கோடி ரூபாய்களை அவர் வாரி வழங்கியமைதான். இம்முறை அவருக்கு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. பதவி வழங்கப்படுவதாக உறுதியளித்தபோதும் அதையும் வழங்க முடியவில்லை.
இதனால், குகதாஸனை அந்தப் பதவியில் அமர்த்தப்படுவதை யாரும் கேள்விக்கு உட்படுத்தப் போவதில்லை என்பது உறுதியாகிறது. குகதாஸனின் நியமனத்தை கட்சியின் உயர்பீடமும் அவருக்குப் பொதுச் செயலாளர் பதவி கிட்டுவதையே விரும்புகிறது. இதனால், குகதாஸன் அந்தப் பதவியில் அமரவே வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது.