தமிழ் தேசிய அரசியலில் தன்னை மிகவும் ‘பெருத்த புனிதராக’ காண்பிக்க முயலுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாருக்கான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுகிறார் என்பது, அவரது சமீபத்திய செயற்பாடுகள் மற்றும் கருத்துக்கள் ஊடாக அம்பலம் ஆகின்றன. தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களை ஒடுக்குபவர்களுக்கு ஆதரவாகவுமே அவரது செயற்பாடுகள் மிகக் கச்சிதமாக இடம்பெறுகின்றன. அதிலும் அண்மைக் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய சில சாதக சூழலை இல்லாமல் ஆக்குவதும் அவர் நோக்கம்.
அரசியலில் எல்லாவற்றையும் நேரடியாகத்தான் செய்ய வேண்டும் என்றில்லை. தேர்ந்த அரசியல் வியாபாரிகளும் அரசியல் திருடர்களும் தமது அரசியலுக்கான, சுய லாபத்திற்காகன செயற்பாடுகளை மறைமுகமாகவும் மேற்கொள்ளுவதுண்டு. வெளியில் ஒரு வேடமிட்டுக் கொண்டு, மக்களுக்கு எதிராகவும் அநியாய அக்கிரமங்களை புரியும் அரசியலுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றமையை திரைப்படங்களிலும் கண்டிருக்கிறோம். அதுவே ஈழத்தில் இன்றைக்கு கனகச்சிதமாகச் செய்யப்படுகின்றது.
வடக்கின் முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கை அரசாங்கத்தின் தமிழ் இன விரோதச் செயல்களுக்கு எதிராகவும் பௌத்த பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராகவும் கடுமையாக சொற்களால் போர் புரிந்து கொண்டிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மௌனித்துவிட்ட நிலையில், இன்றைய அரசியல் இடைவெளியில் விக்கியின் குரலே ஈழத் தமிழ் மக்களின் மனக் கிடக்கைகளை வெளிப்படுத்தும் சாட்டையாக ஒலிக்கின்றது.
எனவே இப்படியான தருணத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்படுவதையும் பேசுவதையும் மாத்திரமே திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர் முழு நேரப் பணியாக கொண்டுள்ளனர் என்றால் இவர்கள் யாருக்கான அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றனர்? அப்படியெனில் இலங்கை அரசுக்கும் பௌத்த பேரினவாதிகளுக்கும் ஆதரவாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பணியாற்றுகிறதா? தமது கட்சியின் முழு இலக்கே இதுதானா?
தற்போது திரு. விக்னேஸ்வரன் அவர்கள், சவேந்திரசில்வாவுக்கு எதிராக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பாவித் தமிழ் மக்களை கொன்றது வீரமல்ல என்றும் அமெரிக்காவின் தடையை வரவேற்றுள்ள விக்கி, ஏனைய நாடுகளும் சவேந்திரசில்வாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில், கஜேந்திரகுமார் அணியினர் குறுக்குச்சால் ஓட்டுவது எதற்காக? விக்கியின் இக் கோரிக்கையின் கவனத்தை திசை திருப்பி, சவேந்திர சில்வாவின் வீரப் புகழைப் பாதுகாப்பதற்கா?
நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சாடியே அரசியல் செய்து வந்த கஜேந்திரகுமார் அணியினர், கடந்த ஆட்சிக் காலத்தில் சுமந்திரன் செய்து வந்த செயல்களை இன்றைய ஆட்சிக் காலத்தில் புரிகின்றனர். அன்றைய அரசுக்கு தேவையானதை சுமந்திரன் செய்தார் எனில் அதேபோலச் செயல்களை புரிவதன் மூலம் இன்றைய அரசுக்கு தேவையானதை கஜேந்திரகுமார் அணி செவ்வனே செய்கின்றனர். அன்று ‘இனப்படுகொலைத் தீர்மானம்’ வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினர் விக்னேஸ்வரனுக்கு குடைச்சல் கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்ப கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். அதேபோல் இன்று, இன்றைய அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விக்கியை வீட்டுக்கு அனுப்ப கஜேந்திரகுமார் அணியினர் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
தன்னைத் தவிர அனைவரும் புனிதம் இல்லாதவர்கள் என்று காண்பிக்க முனையும் கஜேந்திரகுமார், 2009இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் எதிராக நன்றாகத் திட்டமிட்டு செயல்களை ஆற்றி வருகின்றனர். குடும்ப வறுமையாலும், பொறுப்பாளர்களின் வற்புறுத்தலாலுமே இளம் வயதினர் போராட்டத்தில் இணைந்தனர் என்று புலிகளை கொச்சைப்படுத்திய கஜேந்திரகுமார் எப்படி ஒரு புனிதராக இருக்க முடியும்? இதை அரசும் அவர்களுடன் இணைந்து செயற்படுபவர்களும்தானே சொல்லிக் கொள்கின்றனர்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை, போரில் இறந்த அனைத்து தரப்புகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக மாற்றுவேன் என்பதும், அதன் தொடர்ச்சியாக மாவீரர் பெற்றோர் கௌரவிப்பை ‘ஈகையர் பெற்றோர் கௌரவிப்பு எனப் பெயர் மாற்றியதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மாவீரர்களுக்கும் செய்யும் துரோகமல்லவா? புலிகளின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளை மாற்ற இவர்கள் யார்? அப்படி மாற்றுவது புலிகளுக்கு எதிரான துரோகமல்லவா? மறைமுகமாக இத்தகைய துரோகச் செயல்களை செய்து கொண்டு தன்னை தானே புனிதராக்குவது மிகவும் இழிந்த அரசியல் செயற்பாடல்லவா?
தலைவர் பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி, அதன் பின்னர், ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் போராளிகளுக்காகவும் குரல் கொடுக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனை, ‘துரோகி’, ‘மண்டையன் குழு’ என அழைக்கும் அதிகாரத்தை திரு. கஜேந்திரகுமாருக்கு யார் வழங்கியது? இலங்கை அரசைப் போலவே சுரேஷின் குரலை அழிக்க கஜேந்திரகுமாரும் ஆசைப்படுவது யாருக்கான அரசியல் நகர்வு? இவரின் தந்தையான குமார் பொன்னம்பலத்தின் ‘மாமனிதர்’ பட்டத்தையும் இவர் கேள்விக்குட்படுத்துகிறாரா?
குமார் பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலனவை அரச ஒத்தூதிச் செயற்பாடாகவே இருந்தன. ஆனால் கொல்லப்படுவதற்கு இரண்டு வருட காலத்துக்கு முன்பே தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழ்த் தேசத்துக்காகவும் குரல் கொடுத்தார். அதன் பிரதி பலனே ‘மாமனிதர்’ விருது. குமார் பொன்னம்பலத்திற்கான ‘மாமனிதர்’ விருதுமூலம் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் ஒரு மறைமுகச் செய்தியை புலிகள் வெளிப்படுத்தியிருந்தனர். அந்தச் செய்தி ‘கடந்த காலங்களில் எந்த அரசியல்வாதிகளாவது தமிழ்த் தேசிய விரோத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தாலும் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் அவர்களை மன்னித்து அவர்களுடன் இணைந்து பயணிக்கத் தயார்’ என்பதே.
அதன் தொடர்ச்சியாகவே, 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. விடுதலைப் புலிகளும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உட்பட நான்கு கட்சிகளின் கடந்த காலச் செயற்பாடுகளை மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த காலச் செயற்பாடுகளை வைத்து சேறுபூசி, நிகழ்காலத்தில் தமிழ்த் தேசியப் பாதையில் சரியாக பயணிப்பவர்களை அரசியல் பாதையில் இருந்து அகற்ற நினைப்பது என்பது தலைவர் பிரபாகரனுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ள நிலையில், அமெரிக்கா சவேந்திரசில்வாவுக்கு தடை வித்துள்ள நிலையில், அது சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து, தமிழ் மக்களின் விமோசனத்திற்கும் நீதிக்குமான வேலைகளை செய்ய வேண்டிய நேரத்தில் அதை செய்பவர்களை தடுப்பதும், அந்த அரசியல் சூழலை திசை திருப்புவதும், வேறு பேசுபொருள்களை ஏற்படுத்த முனைவதும் நிச்சயமாக இலங்கை அரசுக்கு ஆதரவான நகர்வுகளேயன்றி வேறில்லை.
தற்போதைய அரசு, சீனச் சார்பு அரசியலை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான அரசியலில் மும்மரமாக அக்கறை கொண்டு காங்கிரஸ் செயற்பட்டு வருவது இலங்கை அரசின் சீன சார்புக்கு ஆதரவு வழங்கலும் உழைப்பதுமே ஆகும். முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தலைவர் பிரபாகரனின் முடிவுகளையும் கேள்விக்குட்படுத்திக் கொண்டு, தலைவர் பிரபாகரனுக்குப் பின்பு தான்தான் ‘தேசியத் தலைவர்’ என்று தனது கட்சிக்காரரை வைத்து பகிரங்க மேடையில் அறிவித்து, இன்றைக்கும், தமிழ் இனத்திற்கு எதிராக தேர்ந்த அரசியலை முன்னெடுக்கும் கஜேந்திரகுமார் புனிதரா? துரோகியா? அவரது அரசியல் நகர்வுகள் யாருக்கானவை? எமது மக்களுக்கு இவைகள் குறித்தெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தமிழ்க்குரலுக்காக தாயகன்
( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )