தனி தேசமே தமிழருக்கு ஒரே வழி!

.jpg
.jpg

மறைந்த குமரிக்கண்டத்தின் எச்சமேஇலங்காபுரி,ஈழவர் தம் பெருமைதனை உலகிற்கு பறைசாற்றும் நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த இராவண வம்சத்தவரின் சிவபூமி.இது வால்மீகி இராமயணத்தில் அறியலாம். இதனை கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற வித்துவான்களே ஆதரித்துள்ளனர்.

இலங்கையின் வரலாறு கிமு ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் கலிங்க தேசத்திலிருந்து துரத்திவிடப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  எனினும் இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் ஆட்சி வழித்தோன்றலே என்று மகாவம்சம் கூறுகின்றது.

பல்வேறு அரசுகள் ஆட்சி பீடம் ஏறியது, பொலனறுவை வீழ்ச்சியின் பின்னரே ஆகும். அதுவரையில் தமிழரின் பூர்வீகமே ஓங்கியிருந்தது.  எனினும் 16ஆம் நூற்றாண்டில் கடலோரப்பகுதிகளில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் போன்றோரின் கீழ் இயங்கின. 1815இற்குப் பின் முற்றுமுழுதாக பிரித்தானிய ஆட்சியாக இருந்தது, இது 1948 உடன் முடிவிற்கு வந்தது.

காலணித்துவ ஆட்சியின் பின்னரான காலப்பகுதியில் அதாவது சுதந்திரத்திற்குப்பின்னரான காலத்தில் சிறுபாண்மை இனங்கள் சுதந்திரத்தை அடைவதில் இலங்கையில் பல இன்னல்களை இன்று வரை சந்தித்து வருகின்றனர்.

•           தனிச் சிங்கள சட்டம்

•           பௌத்தம் அரசமயமாக்கப்படல்

•           இலங்கைக் குடியுரிமைச் சட்டம்

•           கல்வித் தரப்படுத்தல் சட்டம்

•           திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்

•           யாழ் பொது நூலகம் எரிப்பு

•           சிங்களமயமாக்கம்

•           வேலை வாய்ப்பில் இனப்பாகுபாடு

•           ஆழ் கடத்தல்களும் காணாமல் போதலும்

•           அரச சித்திரவதை

•           பாலியல் வன்முறை

•           இலங்கைத் தமிழர்களின் இனவழிப்பு

•           இந்தியத் தலையீடு

•           மலையக மக்களின் வாழ்வாதரங்கள்

•           ஈஸ்டர் குண்டுவெடிப்பு

1948ம் ஆண்டின் இலங்கை விடுதலையின் பின்பு ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவைகள் எவ்வாறு தம் கொள்கைளளைப் பின்பற்றி அவற்றினால் சிறுபாண்மை மக்களின் சுதந்திரம் பறிபோயின.

1943 ஜனவரி மாதம் து.சு. ஜெயவர்தன அரசாங்க சபைக்கு சிங்கள மொழி தனிச்சட்டம் தொடர்பான முன்மொழிவினை வைத்தார். இதில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி உத்தியோக பூர்வமானதும் என்று குறிப்பிட்டார்.

இதை உள்வாரியாக நோக்கினால் சிறுபாண்மையின மக்களின் ஒடுக்குமுறை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 

அந்த வகையில்,1953ஆம் ஆண்டின் 33ம் இலக்க அரச கரும மொழிச் சட்டம் என்பது எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க தலமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956ஆம் ஆண்டு யூன் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழி என நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் ஆட்சி மொழியான ஆங்கிலம் அகற்றப்படடு 70 வீதமான பெரும்பாண்மை சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

1955ஆம் ஆண்டு ஐ.தே.க, பிரதமருமான ஜோன் கொத்தலாவலயும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் முக்கிய அந்தஸ்து வழங்குவேன் என்று யாழ்ப்பாண விஜயத்தின் போது அவர் குறிப்பிட்டார். இதனால் பௌத்த குருமார்கள், சிங்கள தேசியவாதிகளின் எதிர்ப்புக் காணப்பட்டது.

இதனாலேயே எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவிற்கு சிங்கள மக்களிடையே ஆதரவு காணப்பட்டது, அதனாலேயே ஆட்சிப்பீடம் ஏற வழிவகுத்தது.

1948ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காக கொண்டு  வரப்பட்ட சட்டமாகும். இது 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சிங்கள தேசியவாதிகள் இந்த சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள் . அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் வெற்றி பெற்றார்கள். இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். அதனால் அவர்களது சுதந்திரம், உரிமை என்பன கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

 1948இல் ஈழத் தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் பலர் உயர் கல்வியினைக் கற்றார்கள். இதன் மூலம் கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள் இந்த சட்டங்கள் 1967, 1971,1979 இல் மாற்றப்பட்டன. அதில் அதிக புள்ளிகள் பெற்ற தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர். இந்தச் சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது.

இங்குதான் போராட்டம் தோற்றம் பெற்றது,1956இல் அமைதியான முறையில் அரசியல் ரீதியாகவே முதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் அது பயன் தரவில்லை. ஆகவேதான் ஆயுத போராட்டக் கிளர்ச்சியாக மாறியது.

1969களில் குட்டிமணி, யெகன் போன்ற வீரர்களால் தமிழீழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பொன்னுத்துரை சிவகுமாரன் போன்றோர் இணைந்தனர். 1975 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

தியாகி பொன். சிவகுமாரனின் மரணமே இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை தூண்டி போராட வழிவகுத்தது.

1981ஆம் ஆண்டு யூன் மாதம் 1ம் திகதி இரவு  சிங்கள வன்முறைக் குழுவொன்றால் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இது தமிழர்களது அடையாளத்தை பறிக்கும் நோக்கில் வேண்டும் என்றே செய்யப்பட்து. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் நயவஞ்சக அமைச்சர் காமினி திசாநாயக்க உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்களும் அடங்கியிருந்தனர்.  அதன் மூலம் தமிழ் மக்களிடையே தமிழ் தேசியம் வளர வழி வகுத்தது. இவ்வாறு தமிழர்களின் சுதந்திரம் ஒடுக்கப்பட்டது.

இலங்கையில் அதன் மூலம் இனக்கலவரம் பல்வேறு கோணங்களில் தோன்ற ஆரம்பித்தது. இவ்இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அவ்வப்போது பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றுள்,

1.         பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957 மாவட்ட சபைத்திட்டம்)

2.         டட்லி – செல்வா ஒப்பந்தம் (1963 பிராந்திய சபைத்திட்டம்)

3.         திம்பு பேச்சுவார்த்தை (1985 தமிழர்கள் சுயநிரூணய உரிமை)

4.         இலங்கை இந்திய ஒப்பந்தம் (1987 மாகாணசபைத்திட்டம்)

5.         அரசியல் தீர்வுப் பொதி (1997 பிராந்திய சபைத்திட்டம்)

6.         ஐக்கிய தேசிய கட்சி – புலிகள் பேச்சு(2002 இடைக்கால நிர்வாக சபை)

இவ்வாறான தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றில் பெரும்பாலானவை தோல்விகளே ஆகின.

1987 இலங்கை இராணுவம் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் விபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை மேற்க்கொண்டிருந்தது. இந்த திட்டம் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின் இந்திய இராணுவத்தினர் இலங்கை வான்பரப்பை மீறி ஈழத்துக்கு உணவுப் பொதிகளை வழங்கினர். இதனை பூமாலை நடவடிக்கை எனப்பட்டது. 1987 யூலை 29 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, ஜே. ஆர் ஜெயவர்த்தனாக்குமிடையில் ஈழத்தமிழர்களின் பிரச்சினையைத் தீர்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தை புலிகள் மறுத்தனர் இதன் மூலம் 1987 ஒக்டோபர் 5 இந்திய இராணுவத்தினருக்கிடையில் ஒத்துழையாமையை அறிவித்தனர், இதனால் இந்திய இராணுவம் தமது ஆயுதங்களை திரும்ப பெற ஆணையிட புலிகள் அதனை மறுத்தனர் இதன் மூலம் இருதரப்பிற்கும் போர் மூண்டது. இதன் காரணமாக இந்திய அமைதிகாக்கும் படை வடக்கிற்குள் நுழைந்து பல கலாசார சீர்கேடுகளை செய்தனர். பல பெண்களின் கற்பும் சூரையாடப்பட்டது. 2வருடம் போர் இடம்பெற்றது, பாரிய இழப்பையும் சந்தித்தது. அதன் பின்னர் 1990களில் இலங்கை அரசின் வேண்டுகோளின் நிமித்தம் இந்திய அமைதிகாக்கும் படை மீளப் பெறப்பட்டது.

ஆனாலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் பெரும் விநாசனமாக இருந்த ஒரு துர் செயல் அப்போது வடக்கில் இருந்த முஸ்லீம் சகோதரர்களை வலுக்கட்டாயமாக 1990களில் வெளியேற்றியது. இது ஒரு துன்பமான நிகழ்வே எனலாம். இச் செயலிற்கு பின்னர் தலைவர் மன்னிப்பு கேட்டாலும் இது மாபெரும் தவறு.

அதுமட்டடுமல்லாது இன்றுவரை தொடர்தேர்ச்சியாக இவ் ஒடுக்குமுறை காணப்பட்டே வருகின்றது.  அதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பின் மூலம் பொதுவான அவசரகால சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டன. பெண்கள் முகமூடி அணியும் அவர்களது மதத்தின் பாரம்பரிய கொள்கையினை தகர்த்தனர். இதன்மூலம் அவர்களது சுதந்திரம் பறிபோயின.

மேலும் புதிய அரசாங்கமான கோட்டாபாய இராஜபக்சே மற்றும் மகிந்த இராஜபக்சே அவர்களின் கூட்டணி சுதந்திர தினத்தின் போது சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கொள்கை. இதனால் சிறுபாண்மை மக்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டது.

வாகன ஆவணங்கள் முப்படையினர் சோதிக்கின்றனர், இது பொலிஸ் மட்டுமே கொண்ட அதிகாரம் ஆனாலும் இன்றைய அரசினால் இராணுவத்தினரும் மக்களை சோதனைக்கு உட்படுத்துகின்றனர். இதுவே இலங்கையில் காணப்படும் மிக மோசமான சுதந்திர மட்டுப்பாடுகள். இவ் ஆட்சி முறைமை என்றும் தமிழ் பேசும் மக்களின் இனிமையான சுதந்திரத்தை பெரும்பாண்மை தம் வசம் அடக்கி ஆழ்வதை எடுத்துக்காட்டுகின்றது.

அதன் மூலம் சிங்கள மக்களின் வாழ்வாதாரம் முற்றுமுழுதாக அவர்களுக்கு சார்பாக என்றும் கூற முடியாது, அதன் மூலம் அவர்களும் இன்றளவிலும் பாதிக்கபப்டுகின்றனர் என்பது யதார்த்தம். ஆனாலும் சிறுபான்மை மக்களது சுதந்திரத்திரம் மட்டுப்பாடாகவே காணப்படுகின்றது. இதன் மூலமே பாரிய இன்னல்களை ஈழத் தமிழ் சமூகம் முகம் கொடுக்க வேண்டி வந்தது.

இறுதியாக நடந்த இனவழிப்பு பற்றி பார்த்தோமேயானால் இது தௌ;ளத்தெளிவாக அனைவருக்கும் ஒன்றைப் புலப்படுத்துகின்றது, தழிழருக்கு எந்தவொரு நன்மையும் இங்கு இல்லை. 2009 போரில்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இதனை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐ  நா இன்னமும் இதற்கு முடிவு வழங்கவில்லை என்பதே அப்பட்டமான உண்மை. அதனோடு முள்ளிவாய்க்கால் படு கொலை இன்றளவும் மக்கள் மனதில் மாறாத வொரு வடு. 40, 000 மக்கள் இதன் போது கொல்லப்பட்டனர். போர் முடிந்து 11 வருடங்களாயின அதனோடே நீதியும் நியாயமும் செத்து போயின!வரலாறுகள் வேண்டும் என்றே இங்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியினை முன்வைக்க முடியும், இதில் 13ஆவது சீர்திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களது அபிலாசைகளை ஓரளவேனும் நிறைவேற்ற முடியும். ஆனாலும் இலங்கை அரசு 19ஆவது திருத்தச் சட்ட மூலமாக  13ஆவதில் குறிப்பிட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடமே அதன் அதிகாரம் மேலோங்கியிருக்குமாறு மாற்றங்களை செய்ய முணைகின்றது. இங்கு மத்தியில் அரசானது மாநில அரசுக்கு அதிகாரங்களை பகிர்தளிக்க வேண்டும். மாகாணசபை யார் தலையீடும் இன்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டும். கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆனாலும் சுயநிர்ணயம் இங்கு கடுகளவேணும் காணப்படவில்லை, கைப்பாவையாகவே அவர் செயற்பட்டார். இத்தைகைய சூழ்நிலை மாறி நன்முறையில் சமஷ்டிஆட்சி நடைபெற வேண்டும்.

ஆனாலும் சிங்களப் பேரினவாதிகள் சமஷ்டியினை ஆதரிக்கவில்லை, அவர்கள் எப்பொழுதும் ஒற்றையாட்சியினையே விரும்புகின்றனர். எஞ்சியுள்ள சிறிய அதிகாரத்தையும் எம் அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்தால் இழந்துவிட்டனர் போலும்.

ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை! இத்தகைய வேங்கையர்கள் வாழ்ந்த புண்ணியஸ்தலத்தில் இன்று தமிழர்கள் நயவஞ்சகர்களால் நிராகரிக்கப்படுகின்றனர். வேங்கைகள் ஆட்சி செய்த மண்ணை வீரமற்ற சிங்கங்கள் எமை ஆட்சி செய்கின்றது. மரணித்த எம்மறவர்கள் விதைகளாவார் அவற்றுக்கு உரங்களே எம்மவர்கள்.. புதைந்தவர்கள் என்றோ ஒரு நாள் பெரும் விருட்சமாக உருவெடுத்து “ஒரு குடையின் கீழ் நிழல்” என்ற சித்தாந்தத்தின் கீழ் எமக்கு தீர்வினை எட்டுவார்கள்.

வீர மறவர்கள் வாழ்ந்த தேசம் இது, ஈழவர் வீரம் இன்றும் வீழவில்லை. சமத்துவம், தீர்வு என தேர்தலுக்காக தீர்வு திட்டத்தை முன்வைக்கின்றனர். தமிழர்களுக்காக என்று முகமூடி தரித்து வீட்டுக்கு வாக்கு என்று எமை வீதியில் விட்ட ஸ்திரம் இல்லா அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு அடிபணியும் சில மூடர்களும் உள்ளவரையில் இலங்கை நாட்டில் ஈழவர்களுக்கான தீர்வு என்பது வினாக்குறியே. இது ஈழம், நாம் ஈழவர், நமது அடுத்த தலைமுறையின் புதிய தேச விடுதலைக்காக ஈழத்தின் கடலலை சத்தம் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் கரிகால மன்னன் ஆண்ட மண்தனில்.

-சி. றுக்ஸிகா

(பொன்.சிவகுமாரன் ஞாபகார்த்தமாக,  ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை எட்டுதல் என்ற கருப்பொருளில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற கட்டுரை)