என் வாழ்வில் முக்கியமான படம் – ஐஸ்வர்யா பெருமிதம்!

Aishwarya rajesh
Aishwarya rajesh

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தை சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, நட்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியபோது: சிவாவுக்கு இதில் தங்கையாக நடிக்க வேண்டும் என படத்தின் கதையை பாண்டிராஜ் சொன்னதும், நான் நிஜத்திலேயே இந்தப் படத்துடன் ஒன்றிப்போனேன்.

நிஜத்தில் எனக்கு மூன்று அண்ணன்கள். 2 பேர் இறந்துவிட்டனர். எனது அண்ணனுடன் எனக்கு இருக்கும் பாசப் பிணைப்பு நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். “நம்ம வீட்டுப் பிள்ளை” படம் எனது வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும். பெரும் நட்சத்திர பட்டாளம் இதில் நடித்திருப்பதால் ஒரு பக்கத்தில் நாங்கள் சந்தோசமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். மறுபுறம் பாண்டிராஜ் சார் சத்தம் போட்டுக் கொண்டு வேலை வாங்குவார். சில சமயங்களில் அவரும் சந்தோசமாக இருப்பார். இந்த முழு படமும் நல்ல அனுபவங்களை கொடுத்தது என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்.

அனு இமானுவேல் பேசும்போது, ‘தமிழ் படங்களில் நடிக்க அவ்வப்போது வாய்ப்புகள் வந்தபோதும் நான் ஏற்காமல் இருந்தேன். அதற்கு ஏற்ப இந்தப் படத்தில் என்னை தேர்வு செய்ததற்கு சன் பிக்சர்ஸுக்கு நன்றி. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல் என்னுடன் பழகினார்கள். நான் தமிழ் கற்று வருகிறேன். அடுத்த விழாவில் தமிழில் பேசுவேன்’ என்றார்.