பொங்கல் தமிழர் திருநாள் சிறப்புகள்

pongal1 1
pongal1 1

தமிழர்களின் சிறப்பு நாட்களில் தைப்பொங்கல் திருநாளும் ஒன்றாகும்.

உண்மையை சொல்லப்போனால் உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் இது. என்றைக்கு நாம் பயிர் தொழில் ஆரம்பித்தோமோ அன்றைக்கே இவ்விழாவும் வெவ்வேறு வடிவங்களில் ஆரம்பமாகிவிட்டது.

ஆடியில் விதை விதைத்து, அதை ஆறு மாதம் கழித்து அறுவடை செய்யும் உழவர்கள், தை முதல் திகதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்கிறார்கள். இதை ஒட்டி உருவானதே, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற பழமொழி.

வானியல் சாஸ்திரப்படி சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடவுள் இல்லை என்பவர்கள் கூட வணங்கும் ஒரே தெய்வம் சூரியன். தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாளில் தான் தை மாதம் பிறக்கிறது. இதிலிருந்து உத்திராயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.

உத்திராயனம் என்பதற்கு வடக்கு நோக்கி நகர்தல் என்று பொருள். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்தாலும், சஞ்சாரம் சற்றே வடக்கு நோக்கி சாய்ந்திருக்கும் என்கிறது வானியல். இதிலிருந்து ஆறுமாத காலம் தேவலோக வாசிகளுக்கு பகல் பொழுது என்பது இந்துக்களின் நம்பிக்கை.

உழவு தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்நாளே மாட்டுப்பொங்கல்.

கொல்லேறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற பெயர்களும் இவ்வீரவிளையாட்டிற்கு உண்டு. முன்பு, இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள்.

மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என இதற்கு பல பெயர்கள் உண்டு.

தமிழர் திருநாளின் இறுதியில் வருவது காணும் பொங்கல். இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் சங்கமித்து மகிழ்ந்து பொங்கல் பண்டிகைக்கு விடைகொடுக்கிறார்கள். இக்காணும் பொங்கலை கன்னி பொங்கல், கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய விரைவில் மேளச்சத்தம் கேட்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறார்கள்.

இத்தனை சிறப்புக்கள் கொண்ட தமிழர்களின் கலாச்சார விழாவை நாம் இனிதே கொண்டாடி மகிழ்வோம்.