தமிழ்நாட்டை முன்னேறச் செய்து முத்திரை பதித்த பெருந்தலைவர் காமராஜர் – முதலமைச்சர் புகழாரம்

kamarajar eps
kamarajar eps

தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேறச் செய்து முத்திரை பதித்த பெருந்தலைவர் காமராஜர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், 1954ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ்ச் சமுதாயத்தைப் படிப்பறிவுமிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல தொழிற்சாலைகளை நிறுவித் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்றும் நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கி, தமிழ்நாட்டில் பல அணைகளைக் கட்டிய பெருமைக்குரியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராஜர் முதலமைச்சர் பதவியையும் துறந்து நாட்டுக்காகப் பணியாற்றியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்குத் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோரே இவ்வாறு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.