ஊரடங்கு காலத்தில் காவல்துறைக்கு துணை நிற்கும் நாய்

police during the curfew
police during the curfew

நேப்பியர் பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு காலத்தில் சத்தமே இல்லாமல் போலீசாருக்கு ஒரு நாய் மறைமுகமாக உதவி செய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த சமயம் சாலையில் யாரும் நடமாடாத படி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஆனால் மெரினா கடற்கரை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நின்றுகொண்டு, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு காலத்தில் சத்தமே இல்லாமல் போலீசாருக்கு ஒரு நாய் மறைமுகமாக உதவி செய்து வருகிறது.

அதேவேளை சாலையில் போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சென்றால் இந்த நாய் சத்தமில்லாமல் இருந்து விடுகிறது. அந்த சமயம் அந்த நாய் குரைப்பதில்லை. பின் தொடர்வதும் இல்லை.

நோயின் தாக்கம் தெரியாமல் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்ற எண்ணம் கூட சிலருக்கு ஏற்படாத நிலையில், சாலையில் செல்பவர்களை நாய் விரட்டுவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

இதுகுறித்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் சிலர் கூறுகையில், “நாங்கள் சாப்பிடும்போது இந்த நாய்க்கும் சேர்த்து சில நேரங்களில் சாப்பாடு கொடுப்போம். ஊரடங்கு காலத்தில் போலீசாருக்கு உதவி செய்யும் வகையில் இந்த நாய் செயல்படுவது வியப்பை தருகிறது. போலீஸ் ஜீப்புகள், ஆம்புலன்ஸ்கள் செல்லும்போது இந்த நாய் அமைதியாக இருக்கிறது. குரைப்பது இல்லை. மற்ற வாகனங்களில் செல்பவர்களை விரட்டுவதால், மறுமுறை அவர்கள் இந்த வழியாக வருவதற்கு பயப்படுகிறார்கள்” என்றனர்.