அமெரிக்காவில் இரு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொலை

071120.POLICE SHOOTING.jm .001
071120.POLICE SHOOTING.jm .001

அமெரிக்காவில் இரு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக போலீசாரை குறி வைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் துப்பாக்கி வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் மெக்காலன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மெக்காலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்தது.

இதையடுத்து எடெல்மிரோ கார்சா (வயது 45) மற்றும் இஸ்மாயில் சாவேஸ் (39) ஆகிய 2 போலீஸ் அதிகாரிகள் அவசர அழைப்பு வந்த அந்த வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அந்த வீட்டு வாசலில் வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நின்றுக் கொண்டிருந்தார். அவர் வீட்டிலிருந்த நபர்களை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் எடெல்மிரோ கார்சா, இஸ்மாயில் சாவேஸ் ஆகிய இருவரும் அந்த வாலிபரிடம் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடைந்து விடும்படியும் எச்சரித்தனர்.

ஆனால் அதற்கு செவி சாய்க்காத அந்த வாலிபர் மாறாக போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் போலீஸ் அதிகாரிகள் 2 பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உடனடியாக கூடுதல் போலீசார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள் தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த போலீஸ் அதிகாரிகள் எடெல்மிரோ கார்சா, இஸ்மாயில் சாவேஸ் ஆகிய இருவரையும் சக போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த நபர் மெக்காலன் நகரைச் சார்ந்த ஆல்டன் காரமில்லோ (23) என்பதும் அவர் குற்ற பின்னணி கொண்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.