‘மிக முக்கியமான அணு ஆயுத சோதனை’

8 adu
8 adu

அணு ஆயுதங்களைப் பாய்ச்சும் அதன் ‘சொஹெ’ தளத்தில் நேற்று வடகொரியா மிக முக்கியமான ஏவுகணை சோதனையை நடத்தியதாக வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ‘கேசிஎன்ஏ’ தெரிவித்தது.

ஏவுகணை சோதனைக்காக பயன்படுத்தப்படும் இந்த ‘சொஹெ’ வசதியை வடகொரியா மூடவிருப்பதாக முன்னர் உறுதியளித்திருந்ததை அமெரிக்க அதிகாரிகள் நினைவுபடுத்தினர்.

இதற்கிடையே எத்தகைய சோதனை என்று குறிப்பிடப்படாவிட்டாலும் இதற்கு முன் இச்சோதனை தளம், விண்வெளிக்கு ராக்கெட்டுகளைப் பாய்ச்சவும் ஏவுகணை கருவிகளைச் சோதித்திடவும் பயன்படுத்தப்பட்டது.

சோதனையின் முடிவு, நாட்டின் உத்திபூர்வ நிலையை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று அந்த ஊடகம் கூறியது.

வடகொரிய தரப்பிலிருந்து ஏவுகணை பாய்ச்சப்படும்போது அது குறித்து எச்சரிக்கை விடுக்கும் தென்கொரிய ராணுவம், இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அணு ஆயுதக் களைவுக்கான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடன் நடந்தேறாமல் தள்ளிப் போக, ஒரு ‘புதிய பாதை’யை எடுக்கவுள்ளதாக வடகொரியா எச்சரித்து வருவதற்கிடையே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை விலக்க டிசம்பர் வரை கெடு விதித்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தொடர்ந்து பல அணு ஆயுத சோதனைகளை நடத்திவருகிறார்.

இக்கெடு விடுக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்த்த, வடகொரியாவிடமிருந்து அண்மையில் பல அறிக்கைகளும் செயல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இம்மாதம் ஆளும் கட்சியின் உயர் அதிகாரிகள் சந்திக்கவுள்ள அரிய கூட்டம் முதல் மீண்டும் கிம் ஜோங் உன் குதிரை மீது சவாரி செய்வது வரை, வடகொரியா பல்வேறு திட்டங்களில் இறங்கியுள்ளது.

வடகொரிய அதிகாரிகளிட மிருந்து முக்கிய அறிவிப்புகள் வருவதற்கு முன் பொதுவாக இதுபோன்ற கூட்டங்களும் அதிரடி பிரசாரங்களும் இடம்பெறும்.

நேற்று பயன்படுத்தப்பட்ட சோதனைத் தளம் செயலிழக்க வைக்கப்படும் என்று 2018ல் சிங்கப்பூரில் கிம் ஜோங் உன்னுடன் நடந்த மாநாட்டுக்குப் பின், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“புத்தாண்டுக்குப் பிறகு உலகுக்கு ஏதோ காத்திருப்பதற்கான ஓர் அறிகுறி இச்சோதனைப் பயிற்சி,” என்று இதன் தொடர்பில் அமெரிக்காவின் அணு ஆயுத விவகாரங்களுக்கான நிபுணர் விபின் நரங் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்காவுடன் அணு ஆயுதக் களைவுக்கான பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என்றும் நீண்ட சமரசப் பேச்சுவாரத்தை தேவையில்லை என்றும் ஐக்கிய நாடுகளிடம் வடகொரியத் தூதர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.