வட மாகாண ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்து

Pongal2020Tamil
Pongal2020Tamil

அனைத்து சமூகத்தினரிடையேயும் நம்பிக்கையும், நட்பும் விளங்க வேண்டும் என தெரிவித்து இறைவனின் ஆசியை வேண்டி தைப்பொங்கல் தினத்திலே தானும் இணைந்து கொள்வதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்எம்.சார்ள்ஸ் தனது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில்,

“குளிரும் இருளும் மிகுந்த மார்கழி மாதத்துக்குப் பின்னர், புதிய முயற்சிகளைத் தொடங்கும் மங்கலம் மிகுந்த மாதமாக தை அமைகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று மக்கள் நம்புகின்றார்கள்.

பொங்கல் மரபுவழி பயிர்ச்செய்கைக் காலத்தின் நிறைவைக் குறிப்பதாக அமைவது. விளைந்த நெல் வீட்டுக்குக் கொண்டு வந்து களஞ்சியப்படுத்தப்படும். புது நெல் பொங்கலுக்கு தயாராகிவிடும். தை மாதத்தில் இப்பொங்கல் நடைபெறுவதால் ‘தைப்பொங்கல்’ எனப்படுகின்றது.

தைப்பொங்கல் தமிழ் சமூகத்தின் பண்பாடு, நாகரிகத்தின் உயர் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும். அது எங்களுக்கு ஏராளமான அறுவடையைத் தருதற்குத் துணைசெய்த சூரியனுக்கு நன்றி சொல்லுகின்ற புனிதமான நாளாகும். பயிர்ச்செய்கைச் சமூகம் பண்டைக்காலம் தொட்டே சூரியன்மேல் ஆழ்ந்த பக்தி உடையவர்களாயுள்ளனர். நல்ல விளைவினை ஒவ்வோராண்டும் தந்துதவும் சூரியனுக்கு புதிர் எடுத்துப் பொங்கல் செய்வதனுடாக இந்த மரபு உருவகப்படுத்தப்படுகிறது.

இந்த நல்ல விளைச்சலுக்கு பங்களிக்கின்ற விலங்குகளும் இத் தைப்பொங்கல் நாளிலே நினைவுகூரப்படுகின்றன. இம்மரபுகள் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள நெருங்கிய பிணைப்பினை பொருளுள்ள முறையிலே வலுப்படுத்துகிறது. மரபுநிலையில், தைப்பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

தைப்பொங்கல் நாளின் முதல்நாள் தூய்மைப்படுத்தும் நாளாகும். பழையவற்றைப் புதியவை ஈடுசெய்கின்றன. வீட்டிலும் வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற பழைய பொருட்கள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. பழைய பாத்திரங்கள் கிரியைமுறைப்படி உடைக்கப்படுகின்றன. புதியவை பெறப்படுகின்றன. பிளாஸ்ரிக், அலுமினியம் முதலியவை பயன்பாட்டில் பெருமளவு ஆகியவுடன் இது ஒரு குறியீட்டு மரபாகவே வந்துவிட்டது.

பொங்கல் நாளன்று குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பொங்கலை ஆக்கி ஒன்றுகூடி உண்பார்கள். பயிர்ச்செய்கை, பண்ணை ஆகியவற்றிலே நெல், பண்ணைப் பொருட்கள், உரம் ஆகியனவற்றைத் தந்து, உழுதற்கும் பொருட்களை ஏற்றிச் செல்லுதற்கும் உதவும் கால்நடைக்கு மூன்றாவது நாள் ஒதுக்கப்பட்டது. அவற்றினுடைய கடின உழைப்பு இந்த நாளிலே நினைவுகூரப்படுகிறது.

நான்காவது நாள் ‘காணும் பொங்கல்’ என்பர். அன்று குடும்ப உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்குச் செல்வதும் பரிசுப் பொருட்கள் பரிமாறலும் இடம்பெறும்.

உலகத்தின் பல இடங்களிலே வாழும் தமிழர்கள் தைப் பொங்கலை குறிப்பட்ட அளவு சமய அடிப்படையிலே கொண்டாடுகின்றனர். ஆனால் அதே நேரம் தைப்பொங்கல் ஒரு விழாவாக, இயற்கை நிலைகளாகிய சூரியன், பண்ணை விலங்குகள் ஆகியவை சிறந்த விளைவைத் தந்து துணைசெய்தமையை நினைந்து கொண்டாடப்படுகிறது. எங்களுக்கு உணவு உற்பத்திசெய்து தரும் பயிர்செய்வோருக்கு நன்றி கூறும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, சமூக இணக்கத்தினை ஊக்குவிக்கவும், மக்களை ஒன்றாக இணைக்கும் ஒரு பொது நிகழ்வாகவும் இது கொண்டாடப்படுகிறது.

இத் தைப்பொங்கல் நாளிலே நட்பின் வலுவான பிணைப்புகள், ஒருவரையொருவர் விளங்கிக்கொள்ளல், நம்பிக்கை ஆகியன எல்லா சமூகத்தினரிடையேயும் விளங்க வேண்டுமென இறைஆசியை வேண்டிக்கொள்ளும் இந்நாள் வணக்கத்திலே நானும் இணைந்துகொள்கிறேன்!

இத் தைப்பொங்கல் நாள் இயற்கையில் எங்களுக்கு இருக்கும் மதிப்பினை பிரதிபலிக்கவும் சம சமூகத்தின் கூட்டுறவினை பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்புள்ளதாக ஆக்க வேண்டுகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.