ரஞ்சனின் ஒலி வடிவத்தை காவித்திரியும் ஊடகங்கள்!

1 aa
1 aa

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவரின் வார்த்தை தேவ வாக்கியம் என்று கருதி ஊடகங்கள் பிரபலமாக எடுக்கும் முயற்சியின் பிரதிபலனாக முழு நாடும் குழம்பி போகும் என இலங்கை ராமஞ்ஞ பௌத்த பீடத்தின் தென்னிலங்கை பிரதான சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

காலி, லபுதுவ பகுதியில் நேற்று நடைபெற்ற தரிசாக கிடந்த வயல் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்யும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தவறான சட்டவிரோத செயல் ஒன்றை செய்திருந்தால் உடனடியாக நாட்டின் சட்டத்தை அவருக்கு எதிராக அமுல்படுத்த வேண்டியதே உண்மையில் முக்கியமானது. அவற்றை பிரசாரம் செய்துக்கொண்டிருக்கும் அவசியமில்லை.

குறிப்பாக இப்படியான சம்பவங்கள் தந்திரமாக செய்யும் வேலைகள் என்றே தோன்றுகிறது. மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளை மறைத்து விட்டு, தேவையற்ற விடயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்ப செய்யும் தந்திரமாக இது தெரிகிறது.

ரஞ்சன் ராமநாயக்கவோ வேறு ஒருவருடைய குரல் பதிவுவோ அல்லது பிரச்சினையோ சட்டவிரோதம் என்றால் அதற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அதனை ரசித்துக் கொண்டு காலத்தை வீணடிக்கும் தேவையில்லை.

தரிசு வயல்களில் அறுவடை செய்வது போன்றவற்றுக்கு பிரசாரத்தை பெற்றுக்கொடுங்கள். ரஞ்சன் போன்றோரின் கதைகள் எமக்கு பிரயோசனமில்லை.

தேவையற்ற விடயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்துவது சம்பந்தமாக முதலில் ஊடகங்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. ஊடகங்கள் இந்த சம்பவங்களை தேவைற்ற வகையில் பிரசாரம் செய்கின்றன எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.