ஹக்கீமுக்கு எதிராக விசாரணை!

1 sdew
1 sdew

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் விசேட விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்கவுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தது.

சாய்ந்தமருது பகுதி வீடு ஒன்றில் தற்கொலைக் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்ட மொஹம்மட் ரில்வான் என்பவரைச் சந்தித்ததாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடி பகுதியில் குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தது. அதற்கான வெடிபொருட்களைத் தயாரிக்கும்போது, ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாதி ஸஹ்ரானின் சகோதரனான ரில்வான் என்ற குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது ரில்வானை முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வைத்தியசாலையில் சந்தித்ததாக சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன என்பவர் பொலிஸ் தலைமையகத்தில் செய்திருந்த முறைப்பாட்டை மையப்படுத்தியே, பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.